சத்ரபதி சிவாஜி பிறப்பிடம் குறித்து சர்ச்சை கருத்து- பா.ஜனதா எம்.எல்.சி.க்கு கடும் எதிர்ப்பு


சத்ரபதி சிவாஜி பிறப்பிடம் குறித்து சர்ச்சை கருத்து- பா.ஜனதா எம்.எல்.சி.க்கு கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சத்ரபதி சிவாஜி பிறப்பிடம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பா.ஜனதா எம்.எல்.சி.க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மும்பை,

சத்ரபதி சிவாஜி பிறப்பிடம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பா.ஜனதா எம்.எல்.சி.க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சர்ச்சை கருத்துகள்

மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசிய கருத்துகள் சர்ச்சைக்கு வித்திட்டது.

குறிப்பாக சத்ரபதி சிவாஜி பண்டைய கால அடையாளம் என கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரை கவர்னர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

இதைத்தொடர்ந்து சத்ரபதி சிவாஜி குறித்து பேசியதற்காக பா.ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சுதன்சு உபாத்யாய், மாநில சுற்றுலாத்துறை மந்திரி மகங்கள் பிரதாப் லோதா ஆகியோரும் விமர்சனங்களை எதிர்கொண்டனர்.

பிறப்பிடம்

தற்போது அந்த வரிசையில் பா.ஜனதா கட்சியின் எம்.எல்.சி. பிரதாப் லாட் இணைந்துள்ளார்.

சமீபத்தில் கொங்கன் மகோத்சவ் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறப்பிடம் குறித்து பேசிய பிரதாப் லாட், அவர் கொங்கன் பகுதியில் பிறந்ததாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்திள்ளது.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி, "பாரதீய ஜனதா கட்சி வரலாற்றை பற்றி மற்றவர்களுக்கு கூறுவதற்கு முன்பு தங்கள் சொந்த கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கற்பிக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.

எம்.எல்.சி. பதில்

அதேபோல உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், "மாமன்னர் சத்ரபதி சிவாஜி புனே மாவட்டம் சிவ்னேரியில் பிறந்தார். கொங்கனில் உள்ள ராய்காட்டில் இறந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். பா.ஜனதா வரலாற்றை மீண்டும் திருத்தி எழுத விரும்புகிறதா? அல்லது புதிய வரலாற்று ஆய்வுக்காக பா.ஜனதா கட்சி புதிய குழு எதையாவதும் அமைந்துள்ளதா? " என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு டுவிட்டரில் பதில் அளித்த எம்.எல்.சி. பிரசாத் லாட், " நான் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கொங்கன் சத்ரபதி சிவாஜியின் கர்ம பூமியாகும். சுய ராஜ்யத்திற்கான விதைகள் கொங்கனில் விதைக்கப்பட்டதை யாரும் மறந்துவிட முடியாது. நான் தற்செயலாக அப்படி பேசினேன். அதை உடனடியாக சரி செய்தேன்" என்றார்.

------------------

1 More update

Next Story