சனாதனம் பற்றி சர்ச்சை பேச்சு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு
சனாதனம் பற்றிய சர்ச்சை பேச்சு குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மிரா ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை,
சனாதனம் பற்றிய சர்ச்சை பேச்சு குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மிரா ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சனாதனம் பற்றிய பேச்சு
சென்னை தேனாம்பேட்டையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்' என்று கூறியதாக தெரிகிறது. அவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் டெல்லி உள்ளிட்ட சில மாநில போலீஸ் நிலையங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு
இந்தநிலையில் தானே மாவட்டம் மிரா ரோடு போலீசில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்தார். அவரது பேச்சு சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களின் உணர்வுகளையும், மத உணர்வுகளையும் புண்படுத்தி இருப்பதாக அவர் புகாரில் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் மிராரோடு போலீசார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 295 ஏ (வேண்டும் என்றே மத நம்பிக்கைகளை அவமதித்து உணர்வுகளை தூண்டுதல்), 153-ஏ (இரு பிரிவினர் இடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.