அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் கவர்னர், முதல்-மந்திரிக்கு கொரோனா


அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியல் குழப்பம்

மராட்டியத்தில் ஆளும் சிவசேனா கட்சியில் எதிர்ப்பு அணி உருவாகி உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தி ஓட்டலில் முகாமிட்டு, பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க வேண்டும் என்று சிவசேனாவை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வரும் நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கவர்னருக்கு கொரோனா

அரசியல் குழப்பம் ஏற்படும்போது ஒரு மாநிலத்தில் கவர்னரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த சந்தர்ப்பத்தில் மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் இன்று தென்மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மராட்டிய அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள், குழப்பங்கள் ஏற்பட்டு உள்ள நிலையில், கவர்னரும், முதல்-மந்திரியும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story