கொரோனா சிகிச்சை மைய முறைகேடு - மாநகராட்சி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் மும்பை மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
மும்பை,
கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் மும்பை மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
கொரோனா சிகிச்சை மைய முறைகேடு
மும்பையில் கொரோனா பரவலின் போது தற்காலிக ஜம்போ கொரோனா சிகிச்சை மையங்கள் அமைத்ததில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. தொழில் அதிபர் சுஜித் பட்கர் போலி ஆவணங்கள் மூலம் ஜம்போ சிகிச்சை மையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக ஆசாத் மைதானம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து உள்ளது. அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகாலிடம் விசாரித்து இருந்தது.
15 இடங்களில் சோதனை
இந்தநிலையில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை ஐம்போ சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமான தொழில் அதிபர் சுஜித் பட்கர், மாநகராட்சி முன்னாள் கூடுதல் கமிஷனரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சஞ்சீவ் ஜெய்ஸ்வால், ஆதித்ய தாக்கரேக்கு நெருக்கமான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா செயலாளர் சூரஜ் சவான், மாநகராட்சி கொள்முதல் பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த ரமாகாந்த் பிரிதர், மாநகராட்சி துணை மருத்துவ அதிகாரி ஹரிதாஸ் ரதோட் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை
இந்தநிலையில் நேற்று அமலாக்கத்துறை பைகுல்லாவில் உள்ள மும்பை மாநகராட்சி மைய கொள்முதல் துறை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அவர்கள் ஐம்போ சிகிச்சை மைய ஒப்பந்தம் வழங்கியது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் மும்பை மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






