முன்னாள் எம்.பி. மீது 11 வழக்குகளா? - போலீசாருக்கு ஐகோர்ட்டு கண்டனம்

தானே,
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஆனந்த் பிரஞ்ச்பே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இந்த போராட்டம் தொடர்பாக அவருக்கு எதிரான முதலில் ஸ்ரீநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தானேயில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் அவர் மீது மேலும் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு போராட்டத்திற்கு 11 வழக்குகளை பதிவு செய்த போலீசாருக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து நேற்று ஆனந்த் பரஞ்ச்பே நிருபர்களிடம் கூறியதாவது:-
இதே நிலை தொடர்ந்திருந்தால் நான் என்கவுன்டரில் கொல்லப்படலாம். தானே போலீஸ் துறை ஆளும் கட்சியின் தனியார் ராணுவம் போல செயல்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக போலீசாரின் இத்தகைய போக்கு முற்றிலும் மோசமானது. ஆளும் கட்சியினர் நிர்வாக எந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






