பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்ததாக தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது- என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை


பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்ததாக தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது- என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை
x

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்ததாக கூறி நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கும்பலை சேர்ந்தவரை தேசிய புலனாய்வு பிரிவினர் (என்.ஐ.ஏ.) கைது செய்தனர்.

மும்பை,

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்ததாக கூறி நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கும்பலை சேர்ந்தவரை தேசிய புலனாய்வு பிரிவினர் (என்.ஐ.ஏ.) கைது செய்தனர்.

சலீம் குரோஷி

மும்பை பைகுல்லா பகுதியை சேர்ந்தவர் சலீம் குரேஷி என்கிற சலீம் புரூட். இவர் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்ததாக கூறப்படுகிறது. தாவூத் இப்ராகிமின் கும்பலை சேர்ந்த இவர், சோட்டா ஷகீலின் கூட்டாளியாகவும் செயல்பட்டு வந்தார் என கூறுப்படுகிறது. இந்தநிலையில் அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

கடத்தல், போதைப்பொருள், பயங்கரவாதம், பண மோசடி, கள்ளநோட்டு புழக்கம், பயங்கரவாத நிதி திரட்டுதல் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அல்கொய்தா உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளிட்ட பயங்கரவாத மற்றும் குற்ற செயல்கள் தொடர்பாக தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் மீது கடந்த பிப்ரவரி 3-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக கடந்த மே 12-ந் தேதி 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தான் தற்போது இவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி திரட்டுவதற்காக இவர் சட்டவிரோத சொத்து பரிவர்த்தனை, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

கோர்ட்டில் ஆஜர்

கைதான சலீம் குரோஷியை இன்று மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது என்.ஐ.ஏ. தரப்பு, "சலீம் குரோஷி ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பல கோடி ரூபாய் பறித்துள்ளார். சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை பயங்கரவாத செயல்களுக்காக கொடுத்துள்ளார். ஆனால் விசாரணையின் போது ஏமாற்றும் வகையில் பதிலளித்தார். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் அவரை எங்களது காவலில் 15 நாட்கள் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறியது.

இதை மறுத்த சலீம் குரோஷி தரப்பு வக்கீல், "கைது செய்யப்பட்டவர் பைகுல்லா பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். அவர் சோட்டா சகீலுடன் தொடர்பில் இருந்ததற்காக பலிகடா ஆக்கப்பட்டு உள்ளார். இவருக்கு தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை 2 வார காலம் பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எனவே அவரை என்.ஐ.ஏ. காவலில் ஒப்படைக்கக்கூடாது" என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கைதான சலீம் குரோஷியை வருகிற 17-ந் தேதி வரை என்.ஐ.ஏ. காவலில் ஒப்படைத்து உத்தரவிட்டார்.

-------------


Next Story