209 பேர் கொல்லப்பட்ட மும்பை ரெயில் தொடர் குண்டுவெடிப்பு தினம்: நாட்டில் பயங்கரவாத தாக்குதல் குறைய காரணமான பிரதமர் மோடிக்கு நன்றி -
மும்பை தொடர் ரெயில் குண்டுவெடிப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல் குறைய காரணமான பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக பாதிக்கப்பட்டவர் உருக்கமாக கூறினார்.
மும்பை,
மும்பை தொடர் ரெயில் குண்டுவெடிப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல் குறைய காரணமான பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக பாதிக்கப்பட்டவர் உருக்கமாக கூறினார்.
மும்பை ரெயில்களில் குண்டு வெடிப்பு
நாட்டின் நிதி தலைநகர் மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி மாலை நடந்த மின்சார ரெயில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை நாடு எளிதில் மறந்துவிடாது. மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் 15 நிமிடங்களில் மின்சார ரெயில்களின் முதல் வகுப்பு பெட்டிகளில் 7 இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த பிரஷர்குக்கர் குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு மாலை 6.20 மணியளவில் கார்-சாந்தாகுருஸ் ரெயில் நிலையம் இடையே சென்ற மின்சார ரெயிலில் வெடித்தது. அதே நேரத்தில் பாந்திரா - கார் இடையேயும் குண்டு வெடித்தது. இதேபோல ஜோகேஸ்வரி, மாகிம், மிராரோடு-பயந்தர், மாட்டுங்கா-மாகிம், போரிவிலி ஆகிய இடங்களிலும் மின்சார ரெயிலில் குண்டுகள் வெடித்தன. உலகையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலில் 209 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதிகபட்சமாக மாகிம் பகுதியில் குண்டு வெடித்த ரெயிலில் 43 பயணிகள் உயிரிழந்தனர். இதேபோல மின்சார ரெயில் குண்டு வெடிப்பில் 700-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பலர் கை, கால்களை இழந்தனர்.
17-வது ஆண்டு அஞ்சலி
இவ்வளவு பெருந்துயரை சந்தித்த பிறகும், மும்பையில் மின்சார ரெயில் சேவை மக்களின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. அரசையும், போலீசாரையும் நம்பி தினமும் சுமார் 80 லட்சம் மக்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மும்பை மின்சார ரெயில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 17-வது ஆண்டு தினம் அனுசாிக்கப்பட்டது. மாகிம் உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் உருக்கம்
ரெயில் குண்டுவெடிப்பில் காயமடைந்து உடல் ஊனமுற்ற பட்டயக்கணக்காளர் சிராக் சவுகான் (வயது 37) உருக்கமாக கூறியதாவது:-
கார்-சாந்தாகுருஸ் இடையே நான் சென்ற மின்சார ரெயிலில் குண்டு வெடித்தது. அதில் எனக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். இதுநாள் வரை நான் வீல் சேரில் தான் வாழ்ந்து வருகிறேன். 20 வயதில் அந்த பெருந்துயரத்தை நான் சந்தித்தேன். எனது குடும்பமும் நிலைகுலைந்து போனது. எனினும் எனது எதிர்காலம் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம். நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டேன். 2009-ல் பட்டய கணக்காளர் (சிஏ) படிப்பை முடித்தேன்.
2012-ல் சொந்தமாக நிறுவனம் தொடங்கினேன். தற்போது சட்டப்படிப்பும் படித்து வருகிறேன். நான் சொல்ல விரும்புவது இதுதான், வாழ்க்கை எல்லா வித துயரங்களையும் நம்மை நோக்கி வீசும். துயரங்களை தாண்டி தான் மகிழ்ச்சிக்கான பாதை கிடைக்கும். எல்லோருக்கும் சில நேரம் கடினகாலம் வரும். ஆனால் நாம் நின்றுவிட கூடாது. வாழ்வின் அடுத்தக்கட்டம் நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் நாம் எவ்வளவு வளர்ந்து இருக்கிறோம் என்பதை உங்களால் உணர முடியும்.
பிரதமர் மோடிக்கு நன்றி
நான் விபத்தின் போது பயன்படுத்திய ரெயில்வே பாசை தற்போதும் பத்திரமாக வைத்து இருக்கிறேன். 2014-ம் ஆண்டு வரை நாட்டில் பல்வேறு இடங்களில் வழக்கமாக குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து வந்தன. 2014-ம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்து உள்ளது. அதற்காக நான் பிரதமர் மோடிக்கு நன்றி கூற விரும்புகிறேன். உள்நாட்டு பாதுகாப்பு பெரியஅளவில் உயர்ந்து உள்ளது. அரிதாக பயங்கரவாத தாக்குதலுக்கு உயிர்பலி ஏற்படுகிறது. வாழ்க்கையில் முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள். எவ்வளவு கடினமாக இருந்தாலும், உங்களால் முடிந்ததை செய்யுங்கள். கடவுளை நம்புங்கள். வாழ்க்கை அழகானது. சிரித்து கொண்டே மகிழ்ச்சியாக வாழவேண்டும். பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு இன்னும் தண்டனை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. நீதிக்கு காலம் எடுக்கும். எனக்கு யார் மீதும் விரோதம் இல்லை. ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் யார்?, உண்மையான குற்றவாளிகள் யார் என்று கூட எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.








