மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் வழக்கு: பெங்களூரு தாக்குதல் பயங்கரவாதி கைது ஆகிறார் - பரபரப்பு தகவல்

மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு பெங்களூரு தாக்குதல் பயங்கரவாதியுடன் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. கர்நாடக சிறையில் இருக்கும் அவரை கைது செய்ய மராட்டிய போலீஸ் விரைந்தது.
மும்பை,
மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு பெங்களூரு தாக்குதல் பயங்கரவாதியுடன் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. கர்நாடக சிறையில் இருக்கும் அவரை கைது செய்ய மராட்டிய போலீஸ் விரைந்தது.
ரூ.100 கோடி கேட்டு மிரட்டல்
பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரியுமான நிதின் கட்காரி மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர். நாக்பூரில் உள்ள இவரது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு கடந்த ஜனவரி 14-ந் தேதி ரூ.100 கோடி கேட்டு மர்ம போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி தன்னை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளி என்று கூறி மிரட்டல் விடுத்தார். இந்தநிலையில் மார்ச் 21-ந் தேதி மீண்டும் மிரட்டல் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி ரூ.10 கோடி தராவிட்டால் மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு தீங்கு விளைவிப்போம் என்று மிரட்டினார். இது தொடர்பாக நாக்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கர்நாடக மாநிலம் பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தாதா ஜெயேஷ் பூஜாரி தான் இந்த மிரட்டல் அழைப்பை விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெலகாவி சிறையில் இருந்த ஜெயேஷ் பூஜாரியை விசாரணைக்கு அழைத்து வந்து பின்னர் அவரை கைது செய்தனர்.
பயங்கரவாதியுடன் தொடர்பு
இந்தநிலையில் கைதான ஜெயேஷ் பூஜாரிக்கும், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் 2005-ல் தாக்குதல் நடத்திய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பயங்கரவதி அப்சர் பாஷாவுக்கும் இடையே தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. அப்சர் பாஷா தற்போது பெலகாவி சிறையில் இருக்கிறார். 2 பேரும் பெலகாவி சிறையில் இருந்த நிலையில் நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த மிரட்டல் சம்பவங்களில் பயங்கரவாத தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது.
கைது செய்ய விரைந்த போலீஸ்
இந்தநிலையில் பெலகாவி சிறையில் இருக்கும் அப்சர் பாஷாவை கைது செய்ய நாக்பூர் போலீசார் விரைந்துள்ளனர். அப்சர் பாஷா முன்பு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவர். ஜம்மு-காஷ்மீர் மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழக தாக்குதல் வழக்குகளில் இவருக்கு கோர்ட்டு தண்டனை விதித்த நிலையில் தற்போது அவர் பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கை பயங்கரவாத கோணத்தில் விசாரிக்க சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) அனுமதி அளித்திருந்தது. அதன்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சமீபத்தில் நாக்பூர் வந்து விசாரணை நடத்தி சென்றது குறிப்பிடத்தக்கது.






