நக்சலைட்டு இயக்கத்தில் கட்சிரோலி இளைஞர்கள் சேரவில்லை- துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சு

கட்சிரோலி இளைஞர்கள் நக்சல் இயக்கத்தில் சேரவில்லை என்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
நாக்பூர்,
கட்சிரோலி இளைஞர்கள் நக்சல் இயக்கத்தில் சேரவில்லை என்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
அஜித் பவார் கோரிக்கை
மராட்டியத்தில் கட்சிரோலி மாவட்டம் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். நேற்று நடைபெற்ற குளிர்கால சட்டசபை கூட்டதொடரில், கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள சுர்ஜாகர் சுரங்க திட்டத்திற்கு நக்சலைட்டுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. தரம்ராவ் அத்ரமுக்கு மிரட்டல் விடுத்து இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
மேலும் எம்.எல்.ஏ. தரம்ராவ் அத்ரமுக்கு இருக்கும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அவரது பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான அஜித் பவார் கோரிக்கை வைத்தார்.
வேலைவாய்ப்பு
இதேபோல தேசியவாத காங்கிரஸ் தலைவர் திலீப் வால்சே பாட்டீல் கூறுகையில், "நக்சலைட்டுகள் சுரங்க திட்டத்தை நிறுத்த திட்டமிட்டு வருகின்றனர். அப்படி எதுவும் நடக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த திட்டம் மூலம் சுமார் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்றார்.
ஆனால் நானா படோலே எம்.எல்.ஏ. இதற்கு நேர்மாறான கருத்தை எடுத்து வைத்தார். அவர், சுர்ஜாகர் சுரங்க திட்டத்தால் நக்சலைட்டுகள் இயக்கம் வலுபெற்று வருவதாக தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் குறிப்பிட்ட பிரச்சினைக்கு பதில் அளித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு
நக்சலைட்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள் இந்த சுரங்க திட்டத்தால் சுர்ஜாகர் பாதிக்கப்படும் என்று கூறி உள்ளூர் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இந்த திட்டம் சுர்ஜாகரில் இருந்து வேகு தொலையில் அமைக்கப்படுகிறது.
இந்த சுரங்கம் திட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. கொன்சாரியில் இரும்பு ஆலையின் முதல்கட்ட பணி ஜூன் மாதம் தொடங்கும்.
இந்த முதல்கட்ட பணி வெற்றி பெற்றதும், சுரங்க தொழிலில் ஈடுபடும் நிறுவனம் மாவட்டத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய இந்த திட்டத்தில் மேலும் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. உள்ளூர் மக்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதால் அவர்களும் இந்த திட்டத்திற்கு ஆதரவாக உள்ளனர்.
தற்போது கட்சிரோலியை சேர்ந்த இளைஞர்கள் நக்சலைட்டு இயக்கத்தில் இணைவதில்லை. சத்தீஸ்கார் மற்றும் ஒடிசாவில் இருந்து இந்த இயக்கத்தில் சேர ஆட்கள் வரவழைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






