முன்னாள் மந்திரி தொடர்புடைய 'ரெசார்ட்' வழக்கில் துணை கலெக்டர் கைது

முன்னாள் மந்திரி அனில் பரப் தொடர்புடைய சாய் ரெசார்ட் முறைகேடு வழக்கில் துணை கலெக்டரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்து உள்ளது.
மும்பை,
முன்னாள் மந்திரி அனில் பரப் தொடர்புடைய சாய் ரெசார்ட் முறைகேடு வழக்கில் துணை கலெக்டரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்து உள்ளது.
சாய் ரெசார்ட் வழக்கு
ரத்னகிரி மாவட்டம் தபோலியில் சாய் ரெசார்ட் உள்ளது. இந்த ரெசார்ட் சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தை மீறி கட்டப்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில் தபோலி கோர்ட்டில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடிப்படையாக வைத்து உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த முன்னாள் மந்திரி அனில் பரப், அவரது ஆதரவாளர் சதானந்த் கதம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
சாய் ரெசார்ட்டை அனில் பரப் பினாமி (சதானந்த் கதம்) பெயரில் கட்டியதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. அனில் பரப் தனக்கும் சாய் ரெசார்ட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி வருகிறார்.
துணை கலெக்டர் கைது
சமீபத்தில் அமலாக்கத்துறை சாய் ரெசார்ட் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சதானந்த் கதமை கைது செய்தது. தற்போது அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்தநிலையில் சாய் ரெசார்ட் வழக்கில் அமலாக்கத்துறை தபோலியில் குறிப்பிட்ட நிலத்தில் ரெசார்ட் கட்ட அனுமதி வழங்கிய துணை கலெக்டர் அந்தஸ்து அதிகாரி ஜெய்ராம் தேஷ்பாண்டேயை கைது செய்து உள்ளது. இவர் தபோலி பகுதி முன்னாள் துணை மண்டல அதிகாரி ஆவார். ஜெய்ராம் தேஷ்பாண்டே கடலோர ஒழுங்குமுறை, சுற்றுச்சூழல் விதிகளை மீறி ரெசார்ட் கட்ட அனுமதி கொடுத்ததாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் முன்னாள் மந்திரி அனில் பரப் தன் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.






