அமித்ஷாவை நான் ரகசியமாக சந்தித்தேனா? - ஜெயந்த் பாட்டீல் ஆவேசம்

அமித்ஷாவை தான் ரகசியமாக சந்தித்ததாக கூறுவது குறித்து ஜெய்ந்த் பாட்டீல் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பை,
அமித்ஷாவை தான் ரகசியமாக சந்தித்ததாக கூறுவது குறித்து ஜெய்ந்த் பாட்டீல் விளக்கம் அளித்துள்ளார்.
ரகசிய சந்திப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆளும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைந்தனர். ஆனால் கட்சியின் தலைவர் சரத்பவார் இதை ஏற்றுகொள்ளவில்லை. இதன் காரணமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 ஆக உடைந்துள்ளது. இந்தநிலையில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான அமித்ஷா மராட்டியத்துக்கு வந்துள்ளார். இந்தநிலையில் சரத்பவாரின் அணியை சேர்ந்த மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல், மத்திய மந்திரி அமித்ஷாவை ரகசியமாக சந்தித்ததாக செய்திகள் வெளியானது. மேலும் அவரும் அஜித்பவார் தலைமையிலான அணியில் இணையப்போவதாகவும் கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்து ஜெயந்த் பாட்டீல் ஆவேசமாக கூறியதாவது:-
தேவையற்ற வதந்தி
நான் சனிக்கிழமை மாலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்தேன். பின்னர் கட்சியின் மூத்த தலைவர்கள் அனில் தேஷ்முக், ராஜேஷ் தோபே மற்றும் சுனில் புசாரா ஆகியோரை எனது வீட்டில் சந்தித்தேன். அவர்கள் நள்ளிரவு 1.30 மணி வரை எனது வீட்டில் இருந்தார்கள். இன்று காலை மீண்டும் சரத் பவாரை சந்தித்தேன். இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் புனேயில் அமித்ஷாவை நான் எந்த நேரத்தில் சந்தித்தேன் என்பதற்கு பதில் அளித்து ஆதாரம் காட்டவேண்டும். நான் எப்போதும் சரத் பவாருடன் தான் இருக்கிறேன். இதுபோன்ற தேவையற்ற வதந்திகள் நிறுத்தப்பட வேண்டும். இந்தியா கூட்டணியின் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக நடந்த மகா விகாஸ் அகாடி கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். நான் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவில் அங்கமாக இருக்கிறேன். எனவே இதுபோன்ற யூகங்கள் ஏன் வருகின்றன என்பது தெளிவாக தெரிகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தளத்தை விரிவுபடுத்துவதே எனது ஒரே நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.






