நெடுஞ்சாலைகளில் நிற்கும் லாரிகளில் டீசல் திருட்டு

மும்பை,
நவிமும்பை காலாப்பூர், தண்டபாடா, பழைய மும்பை-புனே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை மற்றும் பன்வெல், பென் ஆகிய இடங்களில் சாலைகளில் நிறுத்தப்பட்டு இருக்கும் கனரக வாகனங்களில் டீசல் திருட்டு சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் தனிப்படை அமைத்து இரவு நேரத்தில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர். இந்த பணியின் போது மும்பை-புனே நெடுஞ்சாலையில் சிலர் லாரியில் இருந்து டீசல் திருடுவதை போலீசார் கண்டனர். போலீசார் அங்கு சென்று டீசல் திருடிய கும்பலை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் பிடிபட்டார். மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர் 37 வயது வாலிபர் எனவும், அவர் தனது கூட்டாளிகளுடன் கடந்த 6 மாதமாக டீசலை திருடி கள்ளச்சந்தையில் விற்று வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய மற்ற 3 பேரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.






