பால்கரில் கிராம அளவில் பேரிடர் மேலாண்மை கமிட்டி - அதிகாரி தகவல்

பால்கரில் கிராம அளவில் பேரிடர் மேலாண்மை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.
மும்பை,
பால்கரில் கிராம அளவில் பேரிடர் மேலாண்மை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.
கிராம பேரிடர் கமிட்டி
பால்கர் மாவட்டம் தகானு தாலுகாவில் கடற்கரையோரம் உள்ள கிராமங்களுக்கு 15 நாட்கள் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது. முகாம் நேற்று முன்தினம் முடிந்தது. நிறைவு நாள் அன்று மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தில் முதல் முறையாக கிராம அளவில் பேரிடர் மேலாண்மை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக உதவி கலெக்டர் சஞ்சிதா மகாபத்ரா கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
பேரிடர்களுக்கு கிராம மக்களை தயார்படுத்துவது நீண்ட காலத்துக்கு உதவியாக இருக்கும். கடுமையான சூழலை எதிர்கொள்ள உதவும். கிராம மக்களுக்கு பேரிடர் மீட்பு பணிகள், முதல் உதவி சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்து உள்ள முதல் மாவட்டம் பால்கர் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
35 கிராமங்களுக்கு பயிற்சி
தாசில்தார் அபிஜித் தேஷ்முக் கூறுகையில், "முதல் கட்டமாக தகானு தாலுகாவில் உள்ள 35 கிராமங்களுக்கு பயிற்சி கொடுத்து உள்ளோம். அடுத்த மாதம் தாலுகாவில் உள்ள மற்ற கிராம மக்களுக்கும் பயிற்சி வழங்கப்படும். பின்னர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் படிப்படியாக பயிற்சி அளிக்கப்படும்" என்றார்.






