தேசியவாத காங்கிரசில் தேசிய அளவிலான கமிட்டிகள் கலைப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவிலான கமிட்டிகள் கலைக்கப்பட்டுள்ளன.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவிலான கமிட்டிகள் கலைக்கப்பட்டுள்ளன.
கமிட்டிகள் கலைப்பு
மராட்டியத்தில் மகாவிகாஸ் அகாடி ஆட்சியில் தேசியவாத காங்கிரஸ் முக்கிய கட்சியாக அங்கம் வகித்து இருந்தது. கடந்த மாதம் மகாவிகாஸ் அகாடி ஆட்சி கவிழ்ந்தது. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவிலான கமிட்டி, பிரிவுகள், அணிகள் கலைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அந்த கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரபுல் படேல் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், "தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சரத்பவாரின் ஒப்புதலை அடுத்து எல்லா பிரிவு மற்றும் அணிகள் உடனடியாக கலைக்கப்படுகின்றன என கூறியுள்ளார்.
சிறுபான்மை, சட்டப்பிரிவு
மூத்த நிர்வாகி ஒருவர் கொடுத்த தகவலின்படி, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலப்பிரிவு, விவசாயிகள் நலப்பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, சட்டப்பிரிவு, மருத்துவர் அணி உள்ளிட்ட பிரிவுகள் கலைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தேசிய பெண்கள் கமிட்டி, மாணவர் அணி, இளைஞர் அணி ஆகியவை கலைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதேபோல மாநில அளவிலான கமிட்டி, பிரிவு, அணி எதுவும் கலைப்படவில்லை. அவை தொடா்ந்து செயல்படும் என பிரபுல் படேல் கூறியுள்ளார்.
திடீரென தேசிய அளவிலான பிரிவு, கமிட்டிகள் கலைக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் தேசியவாத காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்படவில்லை.






