'ஒரோபர்' ஊசி மருந்தை பயன்படுத்த வேண்டாம்- மருந்து நிர்வாகத்துறை ஆணையம் அறிவுறுத்தல்


ஒரோபர் ஊசி மருந்தை பயன்படுத்த வேண்டாம்- மருந்து நிர்வாகத்துறை ஆணையம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:45 PM GMT)

மும்பை,

மும்பை சர்னிரோடு ரெயில் நிலையம் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த நோயாளி ஒருவருக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இதன்பின்னர் அந்த நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஊசி மருந்தின் செயல்பாடு எதிர்வினை காரணமாக நோயாளி உயிர் இழந்ததாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. எம்கியூர் என்ற மருந்து நிறுவனம் தயாரித்து வரும் ஒரோபர் எப்.சி.எம். என்ற ஊசி மருந்து இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து செலுத்திய நோயாளி உயிரிழந்ததாக கூறப்பட்டதை அடுத்து குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஊசி மருந்தை கம்பெனி நிர்வாகம் திரும்பபெற வேண்டும் என்றும், இதனை நாடு முழுவதும் நோயாளிகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்துமாறும் மராட்டிய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை கமிஷனர் பாட்டீல் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "மும்பை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த மருந்தை மொத்த வியாபாரி, மருந்துகடைகளில் இருந்து சேகரித்து ஆய்வுக்கு அனுப்பபட்டு உள்ளது" என்றார்.

இதற்கிடையே தங்களது தயாரிப்பில் உள்ள மருந்துகள் போலியாக தயாரிக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் போலி மருந்துகள் செலுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்ககூடும் எனவும் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் தெரிவித்து உள்ளது.


Next Story