மும்ராவில் டாக்டரை கடத்தி படுகொலை - ஆட்டோ டிரைவர் கைது
மும்ராவில் டாக்டரை கடத்தி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தானே,
மும்ராவில் டாக்டரை கடத்தி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பிணமாக கிடந்த டாக்டர்
தானே மாவட்டம் மும்ராவை சேர்ந்தவர் டாக்டர் சிராஜ் அகமது கான் (வயது62). இவர் கடந்த 20 ஆண்டுகளாக சீல்-டைகர் என்ற பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். கடந்த 18-ந்தேதி இரவு கிளினிக்கில் இருந்து வீட்டிற்கு செல்ல புறப்பட்டார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை தேடினர். இந்த நிலையில் மறுநாள் அதிகாலை கார்டி சாலை பகுதியில் உள்ள ஏரி அருகே அவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது.
கடத்தி கொலை
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் டாக்டரை கொலை செய்தது ஆட்டோ டிரைவரான வாசிம் சத்தார் (44) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், பணத்தகராறு காரணமாக டாக்டரை அவர் கடத்திச் சென்று தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொடூர கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.