மும்பையில் 10 வார்டுகளில் குடிநீர் வினியோகம் ரத்து

பைப்லைன் பராமரிப்பு பணியால் மும்பையில் 10 வார்டுகளில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.
மும்பை,
பைப்லைன் பராமரிப்பு பணியால் மும்பையில் 10 வார்டுகளில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.
பராமரிப்பு பணி
மும்பை மாநகராட்சி சார்பில் பவாய் மற்றும் விராவலி நீர்த்தேக்க பகுதியில் பழுதுபார்க்கும் பணி நடைபெற உள்ளது. வருகிற 29-ந்தேதி (செவ்வாய்கிழமை) முதல் காலை 8.30 மணி முதல் 30-ந்தேதி (புதன்கிழமை) காலை 8.30 மணி வரை பவாயில் 300 மிமீ பைப்லைன்கள் மற்றும் அதிக நீர் அழுத்தத்துடன் கூடிய பெரிய 1800 மி.மீ. குழாய்களில் பழுதுபார்க்கும் பணி நடைபெறுகிறது.
இதன்காரணமாக மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட 10 வார்டுகளுக்கு 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.
அந்தேரியில் ரத்து
அதன்படி முக்கியமாக கே வார்டு பகுதிகளான அந்தேரி கிழக்கு, எம்.ஐ.டி.சி, சீப்ஸ், ஜோகேஸ்வரி கிழக்கு, நேருநகர், ஆசாத்நகர் போன்ற பகுதிகளில் 29-ந்தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். மறுநாளில் ஆனந்த் நகர், சமர்த்நகர், ஷேர்-இ-பஞ்சாப் பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.
இதேபோல கே மேற்கு வார்டு பகுதிகளான ஓஷிவாரா, லோகண்ட்வாலா, வில்லேபார்லே மேற்கு, அந்தேரி மேற்கு, ஜூகு போன்ற பகுதிகளில் 29 மற்றும் 30-ந்தேதி தண்ணீா் நிறுத்தப்படும். இந்த பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்ய டேங்கர் லாரிகள் மூலமாக வினியோகம் செய்யப்படும்.
குறைந்த அழுத்தம்
இதைத்தவிர எல் வார்டு குர்லா, என் வார்டு காட்கோபர், எஸ் வார்டு பாண்டுப் மற்றும் விக்ரோலி, எச் வார்டு பாந்திரா மற்றும் சாந்தாகுருஸ் ஆகிய பகுதிகளில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும். மற்ற வார்டுகளான எம் மேற்கு கோவண்டி, ஜி வடக்கு தாதர் இடங்களில் 24 மணி நேரம் குறைந்த அழுத்தத்துடன் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.






