லால்பாக் ராஜா சிலைகரைப்பின் போது பக்தர்களிடம் நகை, செல்போன்கள் திருடிய 17 பேர் கைது
லால்பாக் ராஜா சிலைகரைப்பின் போது பக்தர்களிடம் நகை, செல்போன்களை திருடிய 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
லால்பாக் ராஜா சிலைகரைப்பின் போது பக்தர்களிடம் நகை, செல்போன்களை திருடிய 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் புகார்
மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 19-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் வழிபாட்டுக்கு பிறகு கடந்த 28-ந்தேதி ஆனந்த சதுர்த்தி தினத்தன்று சிலைகள் கரைக்கப்பட்டன. சிலை கரைப்பு நிகழ்ச்சி தொடர்ச்சியாக 2 நாட்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளின் போது ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் செல்போன், மணிபர்சு, தங்கசங்கலிகள் திருட்டு போனது. முக்கியமாக பரேலில் உள்ள லால்பாக் ராஜா சிலை கரைப்பின் போது திருட்டு சம்பவங்கள் தொடர்பாக காலாசவுக்கி போலீசுக்கு அதிகளவில் புகார் வந்தது.
கேமராவில் ஆய்வு
மான்கூர்டை சேர்ந்த அனுராதா பதக் என்ற பக்தரின் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள தங்கசங்கிலி, லோயர் பரேலை சேர்ந்த ஹருகேஷ் தோட்கேவிற்கு சொந்தமான ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள சங்கிலி, காலாசாவுக்கியை சேர்ந்த சுவர்ணா சாவந்த்விற்கு சொந்தமான ரூ.55 ஆயிரம் நகைகள் காணாமல் போனதாக புகார் அளித்து இருந்தனர். இதுபோல மேலும் பலர் புகார் அளித்த நிலையில், போலீசார் 13 வழக்குகளை பதிவு செய்தனர். இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.
17 பேர் கைது
இந்த விசாரணையில் பக்தர்களிடம் நகைகள், செல்போன், மணிபர்சு பறித்ததாக 17 பேர் பிடிபட்டனர். இவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 85 திருட்டு செல்போன்கள், நகைகள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். பிடிபட்டவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.