ஏக்நாத் ஷிண்டே அணியில் சேரவில்லை- சிவசேனா எம்.பி. விளக்கம்

முதல்-மந்திரியை எந்த கட்சியை சேர்ந்தவரும் சந்திக்கலாம் என்றும், ஏக்நாத் ஷிண்டே அணியில் சேரவில்லை என அவரை சந்தித்து பேசிய சிவசேனா எம்.பி. கூறியுள்ளார்.
மும்பை,
முதல்-மந்திரியை எந்த கட்சியை சேர்ந்தவரும் சந்திக்கலாம் என்றும், ஏக்நாத் ஷிண்டே அணியில் சேரவில்லை என அவரை சந்தித்து பேசிய சிவசேனா எம்.பி. கூறியுள்ளார்.
ஷிண்டேவுடன் சந்திப்பு
சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக 40 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் மாநிலத்தில் ஆட்சியை அமைத்து உள்ளார். அவருக்கு தானே மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதேபோல பல எம்.பி.க்களும் அவரது அணியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் ஒரு சிலரை தவிர எந்த எம்.பி.யும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கவில்லை.
இந்தநிலையில் பால்கர் சிவசேனா எம்.பி. ராஜேந்திர காவித் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தார். இதையடுத்து ராஜேந்திர காவித் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்துவிட்டதாக தகவல் பரவியது.
அணி தாவவில்லை
இதனை ராஜேந்திர காவித் மறுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மரியாதை நிமித்தமாகவே முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தேன். எனது தொகுதியில் சாலை பணிகள் தொடர்பாக அவரிடம் பேசினேன். நான் ஷிண்டே அணியில் சேரவில்லை. முதல்-மந்திரியை எந்த கட்சியை சேர்ந்தவரும் சந்திக்கலாம்" என்றார்.






