எதிர்க்கட்சியினர் தேநீர் விருந்துக்கு வராதது நல்லது- ஏக்நாத் ஷிண்டே கடும் தாக்கு

மும்பை,
மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை அடுத்து ஆளும் கட்சி நேற்று ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இந்தநிலையில் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளாத எதிர்க்கட்சிகளை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
பயங்கரவாதி தாவூத் இப்ராகிமுடன் சிலருக்கு தொடர்பு இருப்பதால் எதிர்க்கட்சிகள் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீன் பார்க்கருடன் சில எதிர்க்கட்சிகள் தொடர்பு வைத்துள்ளன. சிவசேனா- பா.ஜனதா கூட்டணியை மராட்டிய விரோதிகள் என்று கூறுவதற்கு பதிலாக, அப்படி பட்டவர்களை தேச விரோதிகள் என்று சொல்ல மாட்டீர்களா? நான் எனது விசுவாசத்தை உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பா.ஜனதாவுக்கு மாற்றி கொண்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் கூறியுள்ளார்.
ஆனால் மறைந்த பாலாசாகேப் தாக்கரே எங்களுக்கு கற்று கொடுத்ததை தான் நான் இன்னும் பின்பற்றுகிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள். சிவசேனா பெயரையும் சின்னத்தையும் எங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையமும் எடுத்த முடிவு கூட அதை நிரூபித்துள்ளது.
ஒருநாள் தேவேந்திர பட்னாவிசுடன் இணைந்து திடீரென பதவியேற்றுவிட்டு, 2 நாட்களுக்குள் அதை மாற்றிய சரத்பவாரை போல இல்லை. வெற்று குற்றச்சாட்டுகளை முன்வைக்க நீங்கள் புத்திசாலியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சரத்பவார் தண்ணீரில் இருந்து வெளியே வந்த மீன் போன்றவர். அவர் ஆட்சியில் இல்லாததால் இவ்வாறு நடந்து கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது உதவியாளர்கள் தொடர்புடைய பண மோசடி வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் மந்திரி நவாப் மாலிக் தற்போது சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.






