புனேயில் முதியவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு- சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்

புனேயில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
புனே,
புனேயில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வைரஸ் பாதிப்பு
நாசிக்கை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர், கடந்த மாதம் 6-ந்தேதி புனேயில் உள்ள பவ்தான் பகுதிக்கு சென்றிருந்தார். கடந்த 16-ந்தேதி முதியவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் புனேயில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு நடத்திய பரிசோதனையில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதனால் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. புனேயில் உள்ள தேசிய இன்ஸ்டிடியூட் சார்பில் நடத்தப்பட்ட பரிசோதனையிலும் ஜிகா வைரஸ் தொற்று உறுதியானது.
குணமடைந்த முதியவர்
இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட புனே பவ்தான் பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனையை தீவிரப்படுத்தினர். ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்போது பூரண குணமடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது முதியவர் ஒருவர் அந்த தொற்று பாதிப்புக்கு ஆளாகி குணமடைந்து உள்ளார்.
இந்த வைரஸ் முதலில் கடந்த 1947-ம் ஆண்டு ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






