பட்னாவிசை அழைத்து விசாரிக்க வேண்டும்- ஆணையத்துக்கு, பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தல்

பீமா கோரேகாவ் வன்முறை வழக்கில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று விசாரணை ஆணையத்தை பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தி உள்ளார்.
புனே,
பீமா கோரேகாவ் வன்முறை வழக்கில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று விசாரணை ஆணையத்தை பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தி உள்ளார்.
எல்கர் பரிசத் மாநாடு
புனே மாவட்டம் பீமா கோரோகாவில் உள்ள போர் நினைவு சின்னம் அருகே ஆண்டுதோறும் போர் கொண்டாட்ட நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இந்த கொண்டாட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள் நடந்த எல்கர் பரிஷத் மாநாடு தான் காரணம் என புனே போலீசார் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் பீமா கோரேகாவ் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.என்.படேல் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த ஜூன் 5-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு பகுஜன் விகாஸ் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்தநிலையில் பிரகாஷ் அப்பேத்கர் கடந்த வாரம் விசாரணை குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
ஆஜராக முடியாது...
முன்பே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதால் என்னால் மும்பை வந்து ஜூன் 5-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக முடியாது. அதற்கு பதிலாக ஜூன் 14 அல்லது 15-ந் தேதி நான் மும்பைக்கு வருகிறேன். என்னிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பு அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கூடுதல் தலைமை செயலாளர் சுமித் முல்லிக் மற்றும் புனே எஸ்.பி.சுவேஸ் ஹேக் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிக்கொள்கிறேன். அதற்கான ஏற்பாடுகளை விசாரணை ஆணையம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பிரகாஷ் அம்பேத்கரின் இந்த கோரிக்கை குறித்து நாக்பூரில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, "யாரை விசாரணைக்கு அழைக்கவேண்டும் என்று முடிவுசெய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு இருக்கிறது. அப்போது முதல்-மந்திரியாக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் வன்முறையின்போது அமைதியை நிலைநாட்ட உழைத்துள்ளார். சம்மன் அனுப்பப்பட்டால் அவர் நிச்சயமாக விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராவார்" என்றார்.






