அம்பர்நாத் தொழிற்சாலையில் வெடி விபத்தில் ஊழியர் பலி- 2 பேர் காயம்

அம்பர்நாத் தொழிற்சாலையில் காற்றழுத்த கட்டுபாட்டு வால்வு வெடித்து ஊழியர் பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
மும்பை,
அம்பர்நாத் தொழிற்சாலையில் காற்றழுத்த கட்டுபாட்டு வால்வு வெடித்து ஊழியர் பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
வால்வு வெடித்தது
தானே மாவட்டம் அம்பர்நாத் பகுதியில் உள்ள காற்றழுத்த கட்டுப்பாட்டு வால்வு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர் ஸ்ரீகாந்த் கதம் (வயது28). இவர் நேற்று முன்தினம் இரவு ஆலையில் தயாரிக்கப்பட்ட ராட்சத காற்றழுத்த கட்டுப்பாட்டு வால்வை சோதித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென காற்றழுத்த வால்வு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
வெடித்தவுடன் ராட்சத வால்வு ஸ்ரீகாந்த் கதம் மீது வேகமாக மோதியது. அருகில் நின்று கொண்டு இருந்த 2 பேரும் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடன் அதிர்ச்சியில் மற்ற ஊழியர்கள் அங்கு இருந்து ஓடினர்.
ஊழியர் பலி
இந்தநிலையில் சில நிமிடங்களில் அங்கு மீண்டும் வந்த ஊழியர்கள் படுகாயங்களுடன் கிடந்த ஸ்ரீகாந்த் கதம், காயமடைந்த 2 ஊழியர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்ரீகாந்த் கதமை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். மற்ற 2 ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து போலீசார் ஆலை மேலாளர், பாதுகாப்பு மேலாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






