'வலிப்பு நோய் விவாகரத்துக்கான காரணம் அல்ல' - மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு
மனைவிக்கு வலிப்பு நோய் இருப்பது விவாகரத்துக்கான காரணம் அல்ல என்று கூறி கணவரின் மனுவை தள்ளுபடி செய்து மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
மனைவிக்கு வலிப்பு நோய் இருப்பது விவாகரத்துக்கான காரணம் அல்ல என்று கூறி கணவரின் மனுவை தள்ளுபடி செய்து மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கணவர் விவாகரத்து மனு
மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் 33 வயது வாலிபர் ஒருவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் அவர், "எனது மனைவி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரின் மனநலமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சித்ரவதையை அனுபவிக்கிறேன். எனவே அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இதை எதிர்த்து அவரின் மனைவி தாக்கல் செய்த மனுவில், "எனக்கு வலிப்பு நோய் மட்டுமே உள்ளது. இது எனது மனநல ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை" என்று கூறியிருந்தார்.
தள்ளுபடி
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் வினய் ஜோஷி மற்றும் வால்மீகி எஸ்.ஏ. மெனேசஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை நிறைவில் வாலிபரின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இது தொடர்பான தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:- இந்து திருமண சட்டத்தின் பிரிவு 13(1)-ன் கீழ் கணவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆணோ, பெண்ணோ குணப்படுத்த முடியாத மனநிலை பாதிப்புடன் இருந்தால் அல்லது இதுபோன்ற மனநல கோளாறால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தாலோ அந்த நபர் துணையுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று நியாயமாக எதிர்பார்க்க முடியாது என்று கூறுகிறது.
போதுமான காரணம் அல்ல
மருத்துவ சான்றுகளின்படி, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நபர் இயல்பான வாழ்க்கை வாழ முடியும். இந்த பெண் வலிப்பு நோயினால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார். இது நிச்சயமாக ஒரு மனநல கோளாறோ அல்லது மனநோயோ கிடையாது. மேலும் வலிப்பு நோயை சித்ரவதையாக கருத முடியாது. இத்தகைய மருத்துவ சூழல் மனைவியுடன் ஒன்றாக வாழ தடையாக இருக்கும் என்ற மனுதாரரின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த முடியாது. இந்து விவாகரத்து சட்டத்தின்படி அவருக்கு விவாகரத்து வழங்க இதுபோதுமான காரணம் அல்ல. எனவே மனுதாரர் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.