போலீசார் போல் நடித்து ஓமன் நாட்டு தம்பதியிடம் ரூ.1.56 லட்சம் வழிப்பறி- 4 பேருக்கு வலைவீச்சு

போலீசார் போல் நடித்து ஓமன் நாட்டு தம்பதியிடம் ரூ.1.56 லட்சம் வழிப்பறி செய்த பெண் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்பை,
ஓமன் நாட்டை சேர்ந்த தம்பதி மருத்துவ சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை வந்திருந்தனர். நேற்று கொலாபாவில் உள்ள மருந்து கடைக்கு சென்றுவிட்டு வெளியே வந்தனர். அப்போது, காரில் வந்து இறங்கிய பெண் உள்பட 4 பேர் தம்பதியை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தங்களை சிறப்பு படை போலீசார் என அறிமுகப்படுத்திக்கொண்டனர். பின்னர் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் உங்களை சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த உடைமைகளை வாங்கி சோதனை நடத்தினர். இதில் மணிபர்சில் இருந்த ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியை எடுத்து கொண்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு 4 பேரும் காரில் ஏறி தப்பி சென்றனர். இதனால் பதற்றம் அடைந்த தம்பதி கொலாபா போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்தனர்.
அப்போது, அது போல் எந்த போலீசாரும் பணத்தை எடுத்து வரவில்லை என தெரியவந்தது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஓமன் நாட்டு தம்பதி அதே போலீசாராக நடித்து பணத்தை வழிப்பறி செய்த பெண் உள்பட 4 பேர் மீதும் புகார் கொடுத்தனர். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.






