தேர்தல் பிரமாண பத்திரத்தில் தன் மீதான வழக்குகளை பட்னாவிஸ் வேண்டுமென்றே மறைக்கவில்லை; கோர்ட்டின் தீர்ப்பு விவரம்
தேர்தல் பிரமாண பத்திரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுமென்றே தன் மீது உள்ள வழக்குகளை மறைக்கவில்லை என கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
நாக்பூர்,
தேர்தல் பிரமாண பத்திரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுமென்றே தன் மீது உள்ள வழக்குகளை மறைக்கவில்லை என கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
தீர்ப்பு விவரம்
தற்போது துணை முதல்-மந்திரியாக உள்ள தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாக்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டபோது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன் மீதான 2 கிரிமினல் வழக்குகளை மறைத்து விட்டதாக கூறி வக்கீல் சதீஷ் உகே என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது முந்தைய வக்கீலின் கவனக்குறைவு காரணமாக இந்த தவறு நேர்ந்தது, வேண்டுமென்று நான் அந்த வழக்குகளை மறைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சங்ராம் ஜாதவ் கடந்த 8-ந் தேதி வழக்கில் இருந்து துணை முதல்-மந்திரி பட்னாவிசை விடுவித்தார். இந்த தீர்ப்பு குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
நியாயமற்ற எதிர்பார்ப்பு
ஒரு வேட்பாளரின் சில தகவல்களை சேகரித்து வழங்க தவறினால் அதன் முழு பொறுப்பையும் வேட்பாளர் பொறுப்பேற்கவேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக இந்த வழக்கில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனக்கு எதிராக நிலுவையில் இருந்த அனைத்து கிரிமினல் வழக்குகளின் விவரங்களையும் சேகரிக்க ஒரு வக்கீலின் உதவியை பெற்றுள்ளார். மாறாக பட்னாவிஸ் தனது வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு பல்வேறு கோர்ட்டு அறைகளுக்கு அலைந்து திரிந்து தனக்கு எதிரான நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டும் என்பது நியாயமற்ற எதிர்பார்ப்பு.
22 வழக்குகள்
தேர்தல் பிரமாண பத்திரத்தில் தனக்கு எதிரான நிலுவையில் உள்ள 22 வழக்குகள் மிகவும் தீவிரமானவை என்று பட்னாவிஸ் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த 2 கிரிமினல் வழக்குகளை மறைப்பதால் பட்னாவிசுக்கு எந்த பலனும் கிடைக்காது. எனவே அவர் வழக்குகள் பற்றிய தகவல்களை வேண்டுமென்றோ அல்லது தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்துடனோ மறைக்கவில்லை என்று தெரிகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.