ஆதித்ய தாக்கரேக்கு பட்னாவிஸ் பதிலடி


ஆதித்ய தாக்கரேக்கு பட்னாவிஸ் பதிலடி
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரீட் சாலை குற்றச்சாட்டில் ஆதித்ய தாக்கரேக்கு, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

மும்பை,

காங்கிரீட் சாலை குற்றச்சாட்டில் ஆதித்ய தாக்கரேக்கு, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

விமர்சனங்களுக்கு பதிலடி

உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே சமீபத்தில் மாநகராட்சி மேற்கொண்டு வரும் காங்கிரீட் சாலை அமைக்கும் பணியை கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறுகையில், "மும்பையில் 400 கி.மீட்டர் காங்கிரீட் சாலை பணியில் ஒப்பந்ததாரர்களின் நலனை கருத்தில் கொண்டு ரூ.6 ஆயிரம் கோடி டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறினார்.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மும்பை வருகையை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பாந்திரா குர்லா காம்பிளக்சில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. வளாகத்திற்கு வந்தார்.

அப்போது நிருபர்கள் பேட்டி கண்டபோது ஆதித்ய தாக்கரேவின் விமர்சனத்திற்கு அவர் பதிலடி கொடுத்து கூறியதாவது:-

40 ஆண்டுகள் சாலை

இதுபோன்ற விமர்சனங்களுக்கு பின்னால் உள்ள உண்மையான வேதனை என்ன என்றால், கட்டுமான நிறுவனங்களுக்கு பணிக்கான ஆணைகளை அனுமதிக்கும்போது குறிப்பிட்ட சதவீதத்தை அவர்கள் இப்போது வாங்க முடியாது. கடந்த பல ஆண்டுகளாக இதுபோன்ற நடைமுறைக்கு அவர்கள் பழகி விட்டனர்.

2018-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில், மும்பையில் 200 சாலைகளில் கீழ் அடுக்கு இல்லை என்று கண்டறியப்பட்டது. இப்படி தான் ஒவ்வொரு ஆண்டும் சாலை அமைக்கும் பணிகளுக்கான பணி ஆணைகளை வழங்கி, அனுமதியின்போது ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை பெற்றுக்கொண்டனர்.

ஒருமுறை நாங்கள் காங்கிரீட் சாலையை அமைத்தால், அவை 40 ஆண்டுகளுக்கு நிலையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவசேனா கட்சி கடந்த 20 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியை தன் வசம் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story