கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு மந்திராலயா கட்டிடத்தில் இருந்து குதித்து விவசாயிகள் போராட்டம்
கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு மந்திராலயா கட்டிட தற்கொலை தடுப்பு வலையில் குதித்து போராடிய விவசாயிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு மந்திராலயா கட்டிட தற்கொலை தடுப்பு வலையில் குதித்து போராடிய விவசாயிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை தடுப்பு வலை
மும்பை நரிமன்பாயின்ட் பகுதியில் மாநில அரசின் தலைமை செயலகமான மந்திராலயா கட்டிடம் உள்ளது. இங்கு வரும் பொது மக்கள் சிலர் கட்டிடத்தின் மேல்மாடிகளில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து தற்கொலை சம்பவங்களை தடுக்க மந்திராலயா கட்டிடத்தில் முதல் மாடி பகுதியில் பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டது. யாராவது தற்கொலை செய்ய மேல் மாடிகளில் இருந்து குதித்தாலும் இந்த வலை அவர்களை காப்பாற்றிவிடும்.
வலையில் குதித்து போராட்டம்
இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென சிலர் மந்திராலயா கட்டிடத்தில் இருந்த பாதுகாப்பு வலையில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அந்தரத்தில் கட்டப்பட்ட வலையில் நின்றபடி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வலையில் இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியே தூக்கி வந்தனர். முதல்-மந்திரி, துணை முதல்-மந்திாிகள், மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் நிறைந்து இருக்கும் மந்திராலயா கட்டிடத்தில் நடந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இழப்பீடு கேட்டு போராட்டம்
இதையடுத்து நடந்த விசாரணையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமராவதி மாவட்டத்தில், வார்தா மேல் அணை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் என்பது தெரியவந்தது. அணை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட தங்கள் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நீண்டகாலமாக அரசை வலியுறுத்தி வந்து உள்ளனர். அரசு தரப்பில் உரிய பதில் கிடைக்காததை அடுத்து, அரசின் கவனத்தை ஈர்க்க அவர்கள் மந்திராலயா கட்டிட தற்கொலை தடுப்பு வலையில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பலரை போலீசார் மெரின் டிரைவ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் 40 விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே விவசாயிகளின் மற்றொரு தரப்பினரிடம் கோரிக்கைகள் குறித்து மந்திரி ததாபுசே பேச்சுவார்த்தை நடத்தினார்.