ஆட்டோ தீப்பிடித்து பெண் பயணி பலி

தானேயில் ஆட்டோவில் தீப்பிடித்து பெண் பயணி பலியானார்.
தானே,
தானேயில் ஆட்டோவில் தீப்பிடித்து பெண் பயணி பலியானார்.
ஆட்டோவில் தீ
தானேயில் இருந்து பயந்தர் நோக்கி நேற்று அதிகாலை 5 மணியளவில் ஆட்டோ ஒன்று சென்றது. ஆட்டோவை ராஜேஸ்குமார் (வயது45) ஓட்டிச்சென்றார். பெண் பயணி ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்தார். ஆட்டோ தானே கோட்பந்தர் ரோட்டில், காய்முக் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதியது. மோதியவுடன் ஆட்டோவில் தீப்பிடித்தது. டிரைவர், பெண் பயணி உள்ளே சிக்கி கொண்டனர்.
2 பேரும் உதவி கேட்டு சத்தம் போட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் தீப்பிடித்த ஆட்டோவில் இருந்து டிரைவரை மீட்டனர். ஆனால் பெண் பயணியை மீட்க முடியவில்லை.
பெண் பயணி பலி
தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் ஆட்டோவில் எரிந்த தீயை அணைத்து, உடல் கருகிய நிலையில் பெண் பயணியை பிணமாக மீட்டனர். டிரைவர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தானே பேரிடர் மேலாண்மை பிரிவு தலைமை அதிகாரி அவினாஷ் சாவந்த் கூறுகையில், "ஆட்டோவில் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு தான் பெண் பயணியை மீட்க முடிந்தது. அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. ஆஸ்பத்திரியில் அவர் பலியாகிவிட்டதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்" என்றார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த பெண் பயணி யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






