இளம்பெண் கொலை, வாலிபர் தற்கொலை வழக்கில் பெண் போலீஸ் அதிகாரி பணி இடைநீக்கம்

இளம்பெண் கொலை மற்றும் அந்த பெண்ணை கொன்ற வாலிபர் தற்கொலை வழக்கில் பணியில் அலட்சியமாக செயல்பட்ட பெண் உதவி போலீஸ் சப்-இஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
புனே,
இளம்பெண் கொலை மற்றும் அந்த பெண்ணை கொன்ற வாலிபர் தற்கொலை வழக்கில் பணியில் அலட்சியமாக செயல்பட்ட பெண் உதவி போலீஸ் சப்-இஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கொலை
புனேயை சேர்ந்த சுவேதா ரானாவாடே (வயது22). இவர் கடந்த 9-ந்தேதி காதலன் பிரதிக் தாம்லே என்ற வாலிபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மேலும் அப்பெண்ணின் காதலன் பிரதிக் தாம்லே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் உயிரிழந்த 2 பேரும் ஒருவக்கொருவர் காதலித்து வந்தனர். திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இதற்கிடையில் சில பிரச்சினை தொடர்பாக அவர்களது காதலில் பிளவு ஏற்பட்டது. இதனால் சுவேதா வாலிபருடான காதலை துண்டித்து கொண்டார்.
போலீசில் புகார்
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் பிரதிக் தாம்லே இளம்பெண்ணை பின்தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். இதுபற்றி பெண்ணின் பெற்றோர் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந்தேதி சதுரங்கி போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் உதவி சப்- இன்ஸ்பெக்டர் வைசாலி சூல் என்பவரிடம் புகார் அளித்தனர். ஆனால் அவர் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக தான் கொலை, தற்கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. மேலும் பெண் உதவி சப்-இன்ஸ்பெக்டரின் பணி அலட்சியத்தால் தங்களது மகள் கொல்லப்பட்டதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பெண் போலீஸ் அதிகாரி வைசாலி சூல் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.






