விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வெளிநாட்டு பயணி கைது


விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வெளிநாட்டு பயணி கைது
x
தினத்தந்தி 2 April 2023 12:45 AM IST (Updated: 2 April 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பாங்காக்கில் இருந்து மும்பை வந்த விமானத்தில் மதுபோதையில் பணிப்பெண்ணை மானபங்கம் செய்த சுவீடன் நாட்டு பயணியை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

பாங்காக்கில் இருந்து மும்பை வந்த விமானத்தில் மதுபோதையில் பணிப்பெண்ணை மானபங்கம் செய்த சுவீடன் நாட்டு பயணியை போலீசார் கைது செய்தனர்.

பணிப்பெண் மானபங்கம்

தாய்லாந்து தலைநகரம் பாங்காக்கில் இருந்து கடந்த வியாழக்கிழமை மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் சுவீடன் நாட்டை சேர்ந்த கிளாஸ் எரிக் ஹரால்டு ஜோனஸ் வெஸ்ட்பெர்க் (வயது63) என்ற பயணியும் பயணம் செய்தார். மதுபோதையில் இருந்த அவர் விமானப் பணியாளர்களிடம் கடல் இறைச்சி உணவு கேட்டார்.

விமானத்தில் கடல் இறைச்சி உணவு இல்லாததால் பணிப்பெண் ஒருவர் அவருக்கு சிக்கன் சாப்பாடு கொடுத்தார். சாப்பாடு கட்டணத்துக்கு ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் தேய்த்து பணம் செலுத்திய போது, அவர் பணிப்பெண்ணின் கைப்பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அதிர்ச்சி அடைந்த பணிப்பெண் கையை உதறிவிட்டு, பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். அப்போது அந்த பயணி எழுந்து நின்று, மற்ற பயணிகள் முன்னிலையில் பணிப்பெண்ணை தொட்டு மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. பணிப்பெண் சத்தம் போடவும் அவர் மீண்டும் இருக்கையில் உட்கார்ந்தார்.

போலீசில் ஒப்படைப்பு

அதன்பிறகும் அவர் மதுபோதையில் சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். மற்ற விமானப்பணியாளர் ஒருவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அவதூறாக பேசினார். இதைதட்டி கேட்ட பயணி ஒருவரையும் சுவீடன் பயணி தாக்கினார். இந்தநிலையில் விமானம் மும்பையில் தரையிறங்கிய உடன் சுவீடன் நாட்டு பயணி மத்திய தொழில்பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பாதுகாப்பு படையினர் அவரை சகார் போலீசில் ஒப்படைத்தனர்.

சகார் போலீசார் சம்பவம் தொடர்பாக பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் மானபங்க வழக்குப்பதிவு செய்து சுவீடன் நாட்டு பயணி கிளாஸ் எரிக் ஹரால்டு ஜோனஸ் வெஸ்ட்பெர்க்கை கைது செய்தனர். பின்னர் அவர் அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மதுபோதையில் பயணி ஒருவர் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story