நடைபாதையில் கடைகளை அனுமதிப்பது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்- மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு வலியுறுத்தல்


நடைபாதையில் கடைகளை அனுமதிப்பது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்- மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Feb 2023 6:45 PM GMT (Updated: 8 Feb 2023 6:46 PM GMT)

நடைபாதையில் நடைகளை அனுமதிப்பது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என மும்பை மாநகராட்சியை ஐகோர்ட்டு வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

நடைபாதையில் நடைகளை அனுமதிப்பது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என மும்பை மாநகராட்சியை ஐகோர்ட்டு வலியுறுத்தி உள்ளது.

11 கடைகள்

மும்பை ஒர்லியில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு நடைபாதையில் 11 கடைகளை (ஸ்டால்) அமைக்க மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது. இந்தநிலையில் மாநகராட்சியின் இந்த முடிவை எதிர்த்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.பி.சுக்ரே மற்றும் சந்த்வானி ஆகிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஆஸ்பத்திரி, கல்வி நிறுவனம் மற்றும் வழிபாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு எந்த கடைகளும் இருக்கக்கூடாது என்ற விதியை சுட்டிக்காட்டினார். இருப்பினும் மும்பை மாநகராட்சி இந்த தடை நடைபாதை வியாபாரிகளுக்கு மட்டுமே பொருந்தும். கடை உரிமையாளர்களுக்கு பொருந்தது என தெரிவித்தது.

இந்த விவகாரத்தை ஆய்வு செய்த ஐகோர்ட்டு நேற்று கூறியதாவது:-

பொதுமக்களின் நலன்

இதுபோன்ற கடைகளை நடைபாதையில் அமைக்க அனுமதி அளிப்பதால் பாதசாரிகள் நடைபாதைகளை முறையாக பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. நடைபாதை என்பது யாரும் வணிகம் மேற்கொள்வதற்கான இடம் அல்ல. நடைபாதையில் கடைகளை அமைக்க மாநகராட்சி அனுமதி அளித்து பொதுமக்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறது.

இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல சாலையை பயன்படுத்தி தங்களுக்கு தாங்களே ஆபத்தை விளைவித்துக்கொள்கின்றனர். இது சாலையில் செல்லும் வாகனத்தில் இருப்பவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. நடைபாதையின் நோக்கம் வாகனங்கள் அல்லது போக்குவரத்தை சீராக இருக்க அனுமதிப்பதும், பாதசாரிகள் நடக்க பாதுகாப்பான பாதையை உருவாக்குவதுமே ஆகும். நடைபாதையில் கடைகளை அமைப்பதன் மூலம் நடைபாதையின் முதன்மையான நோக்கம் தோற்கடிக்கப்படுகிறது. எனவே மும்பை மாநகராட்சி கடைகளுக்கு அனுமதி கொடுத்த தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story