15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்- தாய், கள்ளக்காதலன் கைது

கள்ளக்காதலனுக்கு தனது 15 வயது மகளை கட்டாய திருமணம் செய்து வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலனும் சிக்கினார்.
புனே,
கள்ளக்காதலனுக்கு தனது 15 வயது மகளை கட்டாய திருமணம் செய்து வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலனும் சிக்கினார்.
கள்ளக்காதல்
புனேயை சேர்ந்த 36 வயது பெண் ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அப்பெண் அந்த வாலிபருடனான கள்ளத்தொடர்பை நீட்டிக்க விரும்பினார். இதனால் தனது 15 வயது மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
இது தொடர்பாக தனது மகளிடம் பேசி உள்ளார். ஆனால் சிறுமி திருமணத்திற்கு விருப்பம் இல்லை என கூறி மறுப்பு தெரிவித்து வந்தாள். ஆனால் அப்பெண் திருமணத்திற்கு மறுத்தால் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டி பணிய வைத்தார்.
2 பேர் கைது
பின்னர் அகமது நகரில் உள்ள கோவிலில் சிறுமிக்கு கள்ளக்காதலனுடன் கட்டாய திருமணம் செய்து வைத்தார். அந்த வாலிபர் சிறுமியை கட்டாயப்படுத்தி கற்பழித்து உள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது தோழியின் பெற்றோரிடம் தெரிவித்தாள்.
இது பற்றி அவர்கள் சந்தன் நகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியின் தாய் அவளை கள்ளக்காதலனுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தாய், கள்ளக்காதலனை கைது செய்தனர்.






