கவர்னருக்கு எதிராக போராட்டம்- முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத் தொண்டர்களுடன் கைது

தானேயில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வந்த தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத், தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்.
தானே,
தானேயில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வந்த தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத், தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்.
கவர்னர் சர்ச்சை கருத்து
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடந்த சில நாட்களுக்கு முன் குஜராத்திகள், ராஜஸ்தானியர்களை வெளியேற்றினால் உங்களிடம் பணம் இருக்காது, மும்பை நிதி தலைநகராக இருக்காது என பேசியிருந்தார். கவர்னரின் பேச்சுக்கு மாநில அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதேபோல கவர்னருக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜிதேந்திர அவாத் கைது
இதில் இன்று தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத் எம்.எல்.ஏ. தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மும்பை ராஜ் பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்தனர். அவர்களை தானே கோப்ரி பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் ஜிதேந்திர அவாத் மற்றும் கட்சியினரை கைது செய்து அழைத்து சென்றனர். போராட்டம் குறித்து ஜிதேந்திர அவாத் கூறுகையில், "கவர்னர் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். இது தீவிரமானது. அவர் எங்களை பிச்சைக்காரர்கள் என நினைக்கிறார். கட்சிகள் அரசியலை தாண்டி கவர்னருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்" என்றார்.






