ஷிண்டே அணிக்கு தாவிய முன்னாள் மந்திரி


ஷிண்டே அணிக்கு தாவிய   முன்னாள் மந்திரி
x

உத்தவ் தாக்கரேவிடம் அனுமதி வாங்கி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவியதாக முன்னாள் மந்திரி அர்ஜூன் கோத்கர் தெரிவித்து உள்ளார்.

மும்பை,

உத்தவ் தாக்கரேவிடம் அனுமதி வாங்கி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவியதாக முன்னாள் மந்திரி அர்ஜூன் கோத்கர் தெரிவித்து உள்ளார்.

தாக்கரேவிடம் அனுமதி

சிவசேனா துணை தலைவராக சமீபத்தில் உத்தவ் தாக்கரேவால் நியமிக்கப்பட்டவர் முன்னாள் மந்திரி அர்ஜூன் கோத்கர். இவர் சமீபத்தில் சிவசேனா உடைந்த போது உத்தவ் தாக்கரேவுடன் தான் இறுதிவரை இருப்பேன் என முழங்கியவர். இந்தநிலையில் அவர் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்து அதிர்ச்சி கொடுத்து உள்ளார்.

எனினும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஷிண்டே அணியில் இணைந்ததாக அவர் கூறியுள்ளார். அணி மாறியது குறித்து அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் சில பிரச்சினைகள் காரணமாக நான் சிவசேனாவில் இருந்து விலக முடிவு செய்து உள்ளேன். எனக்கு உத்தவ் தாக்கரே மீது வருத்தமோ அல்லது மனகசப்போ இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை என்னை கட்சியில் இருந்து வெளியேற வைத்து விட்டது. நான் இது தொடர்பாக உத்தவ் தாக்கரேவிடம் பேசினேன். அப்போது எனது பிரச்சினைகள் தீரும் என்றால் ஷிண்டே அணிக்கு செல்லுமாறு உத்தவ் தாக்கரே கூறினார். கட்சியில் இருந்து வெளியேற அனுமதித்து அவர் என்னை பாதுகாத்து உள்ளார்.

ஷிண்டே உதவி

சிவசேனா எனக்கு நிறைய செய்து உள்ளது. ஜல்னாவில் கட்சியை வளர்க்க நான் பாடுபட்டேன். ஜல்னா சர்க்கரை ஆலையை விவசாயிகள் நலனுக்காக வாங்கினேன். அந்த ஆலையை தொடங்க உதவி செய்யுமாறு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிடம் கேட்டேன். எனக்கு உதவி செய்வதாக அவர் உறுதி அளித்து உள்ளார். இதேபோல ஜல்னா மக்களவை தொகுதியில் போட்டியிட சீட் பெறுவது தொடர்பாக உள்ளூர் பா.ஜனதா தலைவர், மத்திய மந்திரியுமான ராவ்சாகிப் தான்வேயையும் சந்தித்து பேசினேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மராட்டிய கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் ஜல்னா சர்க்கரை ஆலையில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதன் ரூ.78.38 கோடி சொத்துக்களை முடக்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story