மும்பையில் கியாஸ் விலை வரலாறு காணாத விலை உயர்வு- சி.என்.ஜி. கிலோவுக்கு ரூ.3.50 அதிகரிப்பு

மும்பையில் சி.என்.ஜி., பி.என்.ஜி. கியாஸ் விலை வரலாறு காணாத அளவில் உயா்ந்து உள்ளது. சி.என்.ஜி. கிலோவுக்கு ரூ.3.50-ம், பி.என்.ஜி. யூனிட்டு ரூ.1.50-ம் அதிகரித்து உள்ளது.
மும்பை,
மும்பையில் சி.என்.ஜி., பி.என்.ஜி. கியாஸ் விலை வரலாறு காணாத அளவில் உயா்ந்து உள்ளது. சி.என்.ஜி. கிலோவுக்கு ரூ.3.50-ம், பி.என்.ஜி. யூனிட்டு ரூ.1.50-ம் அதிகரித்து உள்ளது.
5 லட்சம் வாகனங்கள்
மும்பையில் கார்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் சி.என்.ஜி. கியாசில் இயக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசலை விட இது விலை குறைவு என்பதால் பெருமளவில் வாகன ஓட்டிகள் இதை பயன்படுத்தி வருகின்றனர். மும்பையில் மட்டும் சுமார் 5 லட்சம் வாகனங்கள் கியாசில் இயங்கி வருகிறது.
இதேபோல வீடுகளுக்கு குழாய் மூலம் பி.என்.ஜி. கியாஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவும் சிலிண்டர் கியாஸ் விலையுடன் ஒப்பிடுகையில் குறைவு ஆகும். மும்பை பெருநகரில் மட்டும் சுமார் 19 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மகாநகர் கியாஸ் நிறுவனம் பி.என்.ஜி. கியாசை வினியோகித்து வருகிறது.
வரலாறு காணாத விலை உயர்வு
இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டாக மும்பையில் சி.என்.ஜி., பி.என்.ஜி. விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதில் கடந்த மாதம் சி.என்.ஜி. விலை கிலோவுக்கு ரூ.6 அதிகரிக்கப்பட்டு இருந்தது. ஒரு கிலோ சி.என்.ஜி. ரூ.86-க்கு பெட்ரோல் பம்புகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது சி.என்.ஜி. விலை கிலோவுக்கு மேலும் ரூ.3.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சி.என்.ஜி. விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. ஒரு கிலோ சி.என்.ஜி. விலை ரூ.89.50 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோல வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் பி.என்.ஜி. விலை யூனிட்டுக்கு ரூ.1.50 அதிகரித்து உள்ளது. இதனால் ரூ.52.50 இருந்த யூனிட் பி.என்.ஜி. தற்போது ரூ.54 ஆக உயர்ந்து வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து உள்ளது.






