அமித்ஷாவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி விளக்க கடிதம்-'சத்ரபதி சிவாஜியை அவமதிப்பதை என்னால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது'


அமித்ஷாவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி விளக்க கடிதம்-சத்ரபதி சிவாஜியை அவமதிப்பதை என்னால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சத்ரபதி சிவாஜியை அவமதிப்பதை என்னால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதி விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை,

சத்ரபதி சிவாஜியை அவமதிப்பதை என்னால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதி விளக்கம் அளித்துள்ளார்.

கவர்னருக்கு எதிர்ப்பு

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அடிக்கடி ஏடாக்கூடமாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியை பண்டைய காலத்தின் அடையாளம் எனக்கூறியதோடு, அவரை மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் ஒப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மராட்டிய எதிர்க்கட்சிகள், பிரச்சினையை புயலாக கிளப்பின.

கவர்னருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதோடு, அவரை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் மராட்டிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய உள்துறை மந்திரியை சந்தித்தபோது, அவரிடம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மீது புகார் அளித்தனர்.

இந்தநிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு தனது தரப்பு நியாயத்தை தெரிவிக்க கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கனவில் கூட...

மாமன்னர் சத்ரபதி சிவாஜி, மகாராணா பிரதாப் மற்றும் ஸ்ரீ குரு கோவிந்த் சிங் போன்ற மாபெரும் அடையாளங்களை அவமதிப்பதை என்னால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. நான் தற்செயலாக தவறு செய்தாலும் உடனடியாக வருத்தம் தெரிவிக்கவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ தயங்கியது இல்லை என்பதை நீங்களே அறிவீர்கள்.

கொரோனா தொற்று காலத்தில் சில பெரிய நபர்கள் வீட்டில் இருந்து வெளியே வராதபோதும், நான் எனது வயதையும் பொருட்படுத்தாமல், மராட்டியத்தில் உள்ள உயரமான கோட்டைக்கு கால்நடையாகவே சென்றேன். நான் உயரத்துக்கு செல்ல ஹெலிகாப்டரையோ அல்லது வாகனத்தையோ பயன்படுத்தவில்லை.

ஆளுமைகள்

நான் எனது பேச்சில் பண்டைய கால ஆளுமைகளை குறிப்பிட்டதுடன், இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும் வகையில் தற்போதைய சிறந்த ஆளுமைகளின் பெயர்களையும் முன்வைத்தேன்.

நான் ஆற்றிய உரையில் ஒரு சில பகுதிகளை எடுத்துக்கொண்டு சிலர் என்னை விமர்சித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story