அரசு ஊழியர்கள் வேலை நிறுத்ததை திரும்ப பெறவேண்டும்- முதல்-மந்திரி ஷிண்டே வேண்டுகோள்

வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை வைத்துள்ளார்.
மும்பை,
வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை வைத்துள்ளார்.
தேசிய ஓய்வூதிய முறை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மாநில அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சட்டசபையில் பேசிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-
அரசு ஊழியர்கள் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அரசுடன் ஆலோசித்து, கலந்துபேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக புதிதாக கொண்டுவரப்பட்ட தேசிய ஓய்வூதிய முறையின்படி 2005-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு நிறைய கால அவகாசம் உள்ளது.
எப்போது வேண்டுமானாலும் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யலாம். ஆனால் இன்றே வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
பழைய ஓய்வூதிய திட்டம்
பணி ஓய்வுக்கு பிறகு அரசு ஊழியர்கள் கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை பெறுவதை உறுதி செய்வதில் எனது அரசு உறுதியாக உள்ளது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு அதன்மூலம் கிடைக்கும் அனைத்து பலன்கள் குறித்தும் சிந்திக்க வேண்டியது அவசியம். இது அனைத்து ஊழியர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு சாதகமாகவே உள்ளது. நாம் எடுக்கும் எந்த முடிவும் நிதி சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நன்கு சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம். அரசு ஊழியர்களின் கோரிக்கையில் எந்த எதிர்மறையான பார்வையும் எங்களுக்கு இல்லை. பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






