மும்பையில் குடிபட்வா தினம் உற்சாக கொண்டாட்டம்


மும்பையில் குடிபட்வா தினம் உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 23 March 2023 12:15 AM IST (Updated: 23 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் குடிபட்வா தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மும்பை,

மும்பையில் குடிபட்வா தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தானேவில் நடந்த விழாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார்.

மராட்டிய புத்தாண்டு

'குடி பட்வா' எனும் மராத்திய புத்தாண்டு மும்பையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மும்பை, 'சைத்ரா' என்ற மாதத்துடன் மராத்திய ஆண்டு தொடங்குகிறது. இதில் சைத்ரா மாதத்தின் முதல் நாள் 'குடி பட்வா' என்று அழைக்கப்படும். இந்த வருட பிறப்பினை மராத்தியர்கள் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மராட்டிய புத்தாண்டு நேற்று பிறந்தது. மராட்டிய புத்தாண்டான 'குடி பட்வா'வை யொட்டி மராத்தியர்கள் அதிகாலையில் எழுந்து தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர்.

பெரும்பாலான வீடுகளில் 'குடி'(வெற்றிக்கொடி) என்றழைக்கப்படும் சிவப்பு மற்றும் பச்சை நிற பட்டு துணியினால் நெய்யப்பட்ட கொடிகள் மூங்கில் கம்புகளில் முகப்பு பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

மோட்டார் சைக்கிளில் ஊர்வலம்

அதுபோல வீடுகளின் முற்றத்தில் கண்ணை கவரும் வண்ண, வண்ண கலர்பொடிகளில் வித்தியாசமான கோலங்கள் போடப்பட்டிருந்தன. பெண்கள் தங்களது பாரம்பரிய உடையுடன் வீதிகளில் இசை வாத்தியங்களை முழக்கியபடி ஆரஞ்சு நிற கொடியுடன் மராத்திய பாடல்களை பாடியவாறும், கலாசார நடனமாடியவாறும் சுற்றி வந்தனர். இந்த கலாசார வீதி உலாவில் சிறுவர்கள் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி உள்பட பல்வேறு வேடமணிந்து குதிரைகளில் சென்றனர். மோட்டார் சைக்கிளில் பெண்கள் பண்டைய கால பெண்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஊர்வலமாக சென்றனர். இந்த கொண்டாட்டங்கள் மராட்டிய கலாசாரத்தை கண்முன் நிறுத்தும் வகையில் அமைந்து இருந்தது.

துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வர்ஷா பங்களாவில் குடும்பத்தினருடன் மராத்திய புத்தாண்டை கொண்டாடினார். இதுபோல ஒர்லி பி.பி.டி. சால் பகுதியில் நடந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கலந்துகொண்டார்.

ஏக்நாத் ஷிண்டே

தானே நகரில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்துகொண்டார். அவர் அங்குள்ள கோபினேஷ்வர் கோவிலில் பல்லக்கை தூக்கியபடி சிறிது தூரம் சென்றார். மேலும் டோம்பிவிலி டவுண்சிப்பில் நடந்த குடிபட்வா ஊர்வலத்தில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து அங்குள்ள நவநிர்மாண் சேனா கட்சி அலுவலகத்திற்கு சென்ற முதல்-மந்திரி அங்கு நடந்த குடிபட்வா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், பண்டிகைகள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு உள்ளது. இதனால் தகிஹண்டி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, தசரா மற்றும் பிற பண்டிகைகளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். நமது கலாசாரம் பழைய நம்பிக்கையுடன் கொண்டாடப்படுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல அரசியல் கட்சியினரும், சினிமா நட்சத்திரங்களும் பொது மக்களுக்கு குடிபட்வா வாழ்த்துகளை கூறினர்.

1 More update

Next Story