சார்ஜா சிறையில் அடைக்கப்பட்ட இந்தி நடிகை மும்பை திரும்பினார்- போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்

போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு சார்ஜா ஜெயிலில் அடைக்கப்பட்ட இந்தி நடிகை கிரிசன் பெரிரா நேற்று மும்பை திரும்பினார்.
மும்பை,
போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு சார்ஜா ஜெயிலில் அடைக்கப்பட்ட இந்தி நடிகை கிரிசன் பெரிரா நேற்று மும்பை திரும்பினார்.
போதைப்பொருள் வழக்கில் கைது
இந்தி நடிகை கிரிசன் பெரிரா (வயது27) கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா நகருக்கு சென்றார். அப்போது விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் அந்த நாட்டு அதிகாரிகளிடம் சிக்கினார். அதிகாரிகள் நடிகையை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்தநிலையில் நடிகையின் தாய் மும்பை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் சிலர் முன்விரோதம் காரணமாக தனது மகள் கிரிசன் பெரிராவை திட்டமிட்டு போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்ததாக கூறியிருந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், மும்பையை சேர்ந்த அந்தோணி பவுல், ரவி போபதே ஆகிய 2 பேர் நடிகையை போதைப்பொருள் வழக்கில் திட்டமிட்டு சிக்க வைத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் நடிகையை திட்டமிட்டு போதைப்பொருள் வழக்கில் சிக்கவைக்கப்பட்டது தொடர்பான வழக்கு ஆவணங்களை சார்ஜா போலீசாருக்கு அனுப்பினர்.
மும்பை திரும்பினார்
இதையடுத்து சுமார் 1 மாதம் கழித்து நடிகை ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும் சட்ட நடைமுறைகள் இருந்ததால் அவரால் உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை. இந்தநிலையில் அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்து நடிகை 4 மாதங்களுக்கு பிறகு நேற்று மும்பை திரும்பினார். அவரை குடும்பத்தினர் கண்ணீர் மல்க விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அவர் மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் மற்றும் உயர் அதிகாரிகளை குடும்பத்துடன் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
போதைப்பொருள் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட நடிகை கிரிசன் பெரிரா, மகேஷ் பட் இயக்கத்தில் வெளிவந்த 'சாதக்-2 ' உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து உள்ளார்.






