புனேயில் ஓட்டல் ஊழியர் தாக்கி கொலை

ஓட்டலில் நடந்த தகராறில் ஊழியரை தாக்கி கொன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புனே,
ஓட்டலில் நடந்த தகராறில் ஊழியரை தாக்கி கொன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தாக்குதல்
புனே பிம்ளே சவுதாகர் பகுதியில் ஓட்டல் ஒன்றில் வெயிட்டராக மங்கேஷ் (வயது19) என்ற வாலிபர் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் 2 பேர் சாப்பிட வந்தனர். அப்போது வெயிட்டர் மங்கேஷ் அவர்களிடம் சென்று உணவுக்கான ஆர்டரை பெற்றார். சிறிது நேரம் கழித்து மட்டன் சூப்பை கொண்டு வந்து கொடுத்தார்.
அப்போது சூப்பில் அரிசி சாதம் கிடந்ததை 2 பேர் கண்டனர். இதனால் வெயிட்டர் மங்கேஷ்சிடம் வாக்குவாதம் செய்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை கண்ட மற்ற ஊழியர்கள் தடுக்க முயன்ற போது அவர்களையும் தாக்கிய 2 பேர் அங்கிருந்து தப்பி சென்றனர்.
வெயிட்டர் கொலை
இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த மங்கேஷ் உள்பட 3 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் வெயிட்டர் மங்கேஷ் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தினர். இதில் விஜய் வாக்கிரே என்ற ஒருவரின் அடையாளம் தெரியவந்தது. மற்றொருவரின் பெயர் விபரங்கள் கிடைக்கவில்லை. மேலும் அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






