புனேயில் வெடிமருந்து தொழிற்சாலையை சுற்றியுள்ள வீடுகளால் மக்கள் உயிருக்கு ஆபத்து - அரசுக்கு, ஐகோர்ட்டு கண்டனம்


புனேயில் வெடிமருந்து தொழிற்சாலையை சுற்றியுள்ள வீடுகளால் மக்கள் உயிருக்கு ஆபத்து - அரசுக்கு, ஐகோர்ட்டு கண்டனம்
x
தினத்தந்தி 7 Sept 2023 12:45 AM IST (Updated: 7 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் வெடிமருந்து தொழிற்சாலையை சுற்றியுள்ள வீடுகளால் மக்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி அரசுக்கு, ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

மும்பை,

புனேயில் வெடிமருந்து தொழிற்சாலையை சுற்றியுள்ள வீடுகளால் மக்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி அரசுக்கு, ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

பொதுநலன் மனுக்கள்

புனேயில் உள்ள காட்கி பகுதியில் வெடிமருத்து தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் பல்வேறு வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த வெடிமருத்து தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டால் சுற்றியுள்ள வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினை குறித்து புனேவை சேர்ந்த 2 பேர் மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் தங்கள் மனுவில், இந்த பகுதியில் கட்டிடங்கள் கட்ட அனுமதிக்க கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.கே உபாத்யாயா மற்றும் நீதிபதி ஆரிப் டாக்டர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-

ஒன்றாக ஆலோசனை

வெடிமருத்து தொழிற்சாலையை சுற்றி ஆபத்தான பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இதற்கு அரசின் ஒழுங்கற்ற நகர திட்டமிடலே காரணம். மனித உயிர்களை இவ்வாறு ஆபத்தில் ஆழ்த்த முடியாது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட கூடும். மத்திய பாதுகாப்பு அமைச்சகம், மராட்டிய அரசு மற்றும் புனே, பிம்ப்ரி சின்ஞ்வாட் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் புனே கலெக்டர் ஆகியோர் கூட்டத்தை கூட்டி பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வை கொண்டுவர வேண்டும். அனைத்து அதிகாரிகளும் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் இந்த பிரச்சினையில் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

உயிரை காக்கவேண்டும்

பொறுப்புகளை தட்டிக்கழிப்பதை நாங்கள் விரும்பவிலலை. அனைவரும் ஒன்றிணைந்து குடிமக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும். நாங்கள் அதிகாரிகள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக ஒரு தீர்வை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தேவாங் வியாஸ், கூட்டம் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து வழக்கு அக்டோபர் மாதம் 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story