ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வீதியில் வெள்ளம்- 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

காட்கோபரில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
மும்பை,
காட்கோபரில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
குடிநீர் குழாயில் வெடிப்பு
மும்பை காட்கோபர், அசல்பா விலேஜ் பகுதியில் நேற்று அதிகாலையில் 72 அங்குல ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. குழாயில் இருந்து சுமார் 10 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் மேலே நோக்கி பீய்ச்சி அடித்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் மழை பெய்து வெள்ள பெருக்கு ஏற்பட்டது போல, வீதியில் தண்ணீர் ஓடியது.
அந்த பகுதியில் உள்ள வீடு, கடைகளுக்கு தண்ணீர் புகுந்தது. 100-க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது. திடீரென தண்ணீர் புகுந்ததால் வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டு திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் வீட்டை தண்ணீர் சூழந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சரி செய்யும் பணி
இந்தநிலையில் தகவல் அறிந்து மாநகராட்சியினர் ராட்சத குழாய் வழியான குடிநீர் வினியோகத்தை நிறுத்தினர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழாயில் ஏற்பட்ட வெடிப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல பொது மக்கள் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதியில் வசித்து வரும் இர்பான் கூறியதாவது:-
பொருட்கள் நாசம்
திடீரென வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். முதலில் எங்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. பிறகு தான் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெள்ளம் போல தெருவில் ஓடுவதை தெரிந்து கொண்டோம். இரவு முழுவதும் வீட்டில் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் வேலையில் தான் ஈடுபட்டோம். வீட்டில் தரையில் வைத்து இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், " வெப்பநிலை மாற்றம் காரணமாக குழாய்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. குளிர்காலங்களில் சில நேரங்களில் பழமையான குடிநீர் குழாய்களில் வெடிப்பு ஏற்படும். உடைந்த குழாயை சரி செய்யும் பணி முடிந்துவிட்டது " என்றார்.
குடிநீர் வினியோகம் பாதிப்பு
குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக காட்கோபர், சாந்திவிலி போன்ற பகுதிகளில் நேற்று குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களுக்கு டேங்கர் மூலம் தண்ணீர் வினியோம் செய்யப்பட்டது.






