மனைவியை கொன்றுவிட்டு தப்பிஓடிய கணவர் கைது- உத்தரபிரதேசத்தில் பிடிபட்டார்

நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொன்றுவிட்டு தப்பிஓடிய கணவரை உத்தரபிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொன்றுவிட்டு தப்பிஓடிய கணவரை உத்தரபிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மனைவி கொலை
மும்பை கோரேகாவ் சந்தோஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்சார் அலி. இவரது மனைவி ரோசி. அண்மையில் அன்சார் அலி தான் குடியிருக்கும் வீட்டை காலி செய்துவிட்டு அப்பகுதியில் உள்ள வேறொரு வீட்டை வாடகைக்கு எடுத்து மனையியுடன் குடியிருக்க வந்தார். வேறு வீடு மாறியது அவரது மனைவி ரோசிக்கு பிடிக்கவில்லை. இதனால் கணவரிடம் வாக்குவாதம் செய்து வந்தார்.
இந்தநிலையில் மனைவி ரோசிக்கு வேறு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக அன்சார் அலிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது தொடர்பாக கடந்த 26-ந்தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த அன்சார் அலி மனைவி ரோசியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
தப்பிஓட்டம்
பின்னர் இது பற்றி அவரது சகோதரி ஜூலிக்கு தகவல் தெரிவித்து விட்டு சொந்த ஊருக்கு ரெயிலில் தப்பிச்சென்றார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ரோசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய அன்சார் அலியை பிடிக்க நாசிக், புஷாவல் ரெயில்வே போலீசாரரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து தேடிவந்தனர்.
இதில் கிடைக்காமல் போனதால் போலீஸ் தனிப்படையினர் விமானம் மூலம் உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் ரெயில் நிலையத்திற்கு சென்றனர்.
கழிவறையில் பதுங்கி இருந்தார்
அங்கு ரெயிலில் வந்து இறங்கிய பயணிகளை கண்காணித்தனர். மேலும் ரெயில்வே போலீசார் ரெயிலின் உள்ளே ஏறி சோதனை போட்டனர். அப்போது பெட்டியின் கழிவறையில் பதுங்கி இருந்த அன்சாரி அலியை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து மும்பைக்கு நேற்று காலை அழைத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியை கொலை செய்து விட்டு தப்பிஓடிய கணவரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






