சரத்பவார்- அஜித்பவார் சந்திப்பில் என்ன நடந்தது என்று தெரியாது; சுப்ரியா சுலே கூறுகிறார்

சரத்பவார்- அஜித்பவார் சந்திப்பில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்
புனே,
தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்துள்ள நிலையில் புனே தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் கடந்த சனிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் துணை முதல்-மந்திரி அஜித்பவார் நடத்திய ரகசிய சந்திப்பு குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்து தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யும், சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கூறியதாவது:- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அஜித்பவார் சந்திப்பின் போது என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அஜித் ததா (அஜித்பவார்) பிறப்பதற்கு முன்பே தொழிலதிபர் அதுல் சோர்டியாவின் தந்தையும், சரத்பவாரும் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். எனவே சரத்பவார் மற்றும் சோர்டியா குடுபத்தினருக்கு இடையே நல்ல உறவு உள்ளது. அதனால் இரு குடும்பத்தினரும் சந்தித்ததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. மறைந்த டாக்டர் என்.டி. பாட்டீல் மனைவி சரோஜ் பாட்டீல், சரத்பவாரின் சகோதரி. ஆனால் மூத்த தலைவர் சரத்பவார் மற்றும் என்.டி. பாட்டீல் இருவரும் பல சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் எதிர்த்து நின்றுள்ளனர். இதற்கு அர்த்தம் சரோஜ் பாட்டீல் மீதான எங்களின் பாசம் குறைந்துவிட்டது என்பது இல்லை. எங்கள் குடும்பத்தில் தனிப்பட்ட உறவுகள் ஒருபுறம் இருந்தாலும், அரசியல் கருத்துகள் மறுபுறம் இருக்கும். இதேபோன்ற நிலை மீண்டும் ஏற்பட்டு உள்ளது. அஜித்பவார் தனது அரசியல் நிலைப்பாடு சரியானது என்று நினைத்தால், ஜனநாயக அமைப்பில் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






