சமூக ரீதியாக மக்களை தூண்டும் வகையில் சல்மான் கானுக்கு எதிராக வீடியோக்கள் பதிவேற்றம்- ஐகோர்ட்டில் நடிகர் தரப்பு வாதம்


சமூக ரீதியாக மக்களை தூண்டும் வகையில் சல்மான் கானுக்கு எதிராக வீடியோக்கள் பதிவேற்றம்- ஐகோர்ட்டில் நடிகர் தரப்பு வாதம்
x
தினத்தந்தி 12 Aug 2022 1:59 PM GMT (Updated: 12 Aug 2022 5:49 PM GMT)

சமூக ரீதியாக மக்களை தூண்டும் வகையில் சல்மான்கானுக்கு எதிராக சமூகவலைதளத்தில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் சல்மான்கான் தரப்பு வக்கீல் வாதிட்டார்.

மும்பை,

சமூக ரீதியாக மக்களை தூண்டும் வகையில் சல்மான்கானுக்கு எதிராக சமூகவலைதளத்தில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் சல்மான்கான் தரப்பு வக்கீல் வாதிட்டார்.

பக்கத்து வீட்டுக்காரர் மீது வழக்கு

ராய்காட் மாவட்டம் பன்வெலில் நடிகர் சல்மான்கானின் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகில் வசிக்கும் கேத்தன் காகட் என்பவர் சல்மான்கானுக்கு எதிராக சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை அகற்ற உத்தரவிடுமாறு சல்மான்கான் சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

எனினும் வீடியோவை அகற்ற உத்தரவிட சிவில் கோர்ட்டு மறுத்துவிட்டது. இதையடுத்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்து உள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சி.வி. பாதங் அமர்வு முன் நடந்தது.

சமூக ரீதியாக தூண்டுதல்

அப்போது சல்மான்கான் தரப்பு வக்கீல் கூறியதாவது:-

கேத்தன் காகட் யூகத்தின் அடிப்படையில் வீடியோவில் வெறுப்பை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வீடியோக்கள் அவதூறு பரப்புபவை மட்டுமல்ல, பார்வையாளர்களை சமூக ரீதியாக சல்மான்கானுக்கு எதிராக தூண்டிவிடுகின்றன. வீடியோவில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சல்மான் கான் அவரது வீடு அருகே உள்ள விநாயகர் கோவிலை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறுகிறார். மேலும் சல்மான்கானை பாபர், அவுரங்கசீப் போன்றவர்களுடன் ஒப்பிடுகிறார். அயோத்தியில் கோவில் கட்ட 500 ஆண்டுகள் ஆனதாகவும், இந்தநிலையில் சல்மான்கான் விநாயகர் கோவிலை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோக்களை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து உள்ளனர். அவர்கள் சல்மான்கானுக்கு எதிராகவும் கருத்து பதிவிட்டுள்ளனர். எனவே இந்த வீடியோக்கள் சல்மான்கானுக்கு எதிராக பார்வையாளர்களை தூண்டிவிடுகிறது என்பது தெளிவாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சல்மான்கான் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி மனு மீதான விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Next Story