ஷீனா போரா கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்- சிறப்பு கோர்ட்டில் இந்திராணி மனு

ஷீனா போரா கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று இந்திராணி முகர்ஜி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
மும்பை,
ஷீனா போரா கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று இந்திராணி முகர்ஜி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஷீனாபோரா கொலை வழக்கு
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை காதலித்ததால், ஷீனாபோராவை அவரது தாய் இந்திராணி கொலை செய்ததாக கூறப்பட்டது.
இந்த வழக்கில் இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம்வர் ராய், பீட்டர் முகர்ஜி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
கோர்ட்டில் மனு
இந்தநிலையில் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி சிறப்பு கோர்ட்டில் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதில் அவர் கூறியதாவது:-
ஷீனா போரா கொலை வழக்கில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் தனது குடியுரிமை நாடான இங்கிலாந்தில் பணிபுரியும் அடிப்படை உரிமையும், இந்தியாவுக்கு வெளியே சுதந்திரமாக பயணிக்கும் உரிமையும் பறிக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணை தொடங்கியத்தில் இருந்து தற்போது வரை 71 சாட்சிகளை மட்டுமே அரசு தரப்பு விசாரித்துள்ளது.
நத்தை வேகம்
இந்த நிலையில் மேலும் 92 சாட்சிகளின் பட்டியலை சி.பி.ஐ. சமர்ப்பித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதேபாணியில் விசாரணை தொடர்ந்தால் வழக்கு மேலும் பல ஆண்டுகள் நத்தை வேகத்தில் நகர வாய்ப்பு உள்ளது. விசாரணை அமைப்பின் பணி சுமை எனக்கு தெரியும். இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான அடிப்படை உரிமை மறுக்கப்படக்கூடாது. எனவே வழக்கை தினசரி அடிப்படையில் 6 மாதத்திற்குள் நடத்து முடிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையை கோர்ட்டு 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.






