ஆஸ்கார் விருது விழா மேடையில் எனது பேச்சு தடுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தேன்- குனீத் மோங்கா பேட்டி

ஆஸ்கார் விருது விழா மேடையில் எனது பேச்சு தடுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தேன் என்று மும்பை திரும்பிய தமிழ் குறும்பட தயாரிப்பாளர் குனீத் மோங்கா கூறினார்.
மும்பை,
ஆஸ்கார் விருது விழா மேடையில் எனது பேச்சு தடுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தேன் என்று மும்பை திரும்பிய தமிழ் குறும்பட தயாரிப்பாளர் குனீத் மோங்கா கூறினார்.
ஆஸ்கார் விருது
95-வது ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 13-ந் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறந்த அசல் பாடல் பிரிவுக்கான விருது ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு... நாட்டு...' பாடலுக்கு கிடைத்தது.
சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் முதுமலை யானை பராமரிப்பு குறித்த தமிழ் குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' படம் ஆஸ்கார் விருதை வென்றது. இந்த படத்தை டைரக்டு செய்த பெண் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வெஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் ஆஸ்கார் விருதை பெற்றுக்கொண்டனர்.
விழா மேடையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்காவின் பேச்சு திடீரென தடுக்கப்பட்டது. பேசுவதின் முடிவை குறிக்கும் வகையில் இசை ஒலிக்கப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தாயகம் திரும்பினார்
இந்த படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா மும்பையை சேர்ந்தவர். அவர் நேற்று ஆஸ்கார் விருதுடன் தாயகம் திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவில் அவரது பேச்சு துண்டிக்கப்பட்ட விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
பெரும் அதிர்ச்சி
ஆஸ்கார் விருது பெற்றது ஒரு வரம் என்று நினைக்கிறேன். விழா மேடையில் நான் மைக்கை நோக்கி நடந்தேன். அப்போது எனது பேச்சு தடுக்கப்பட்டது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இருப்பினும், இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்துக்கு கிடைத்த முதல் ஆஸ்கார் விருது என்று நான் பார்வையாளர்களை நோக்கி சத்தமாக கூறினேன். அப்போது அனைவரும் எனக்கு கைதட்டி பாராட்டினார்கள்.
விழா முடிந்ததும் இந்த சம்பவம் குறித்து விழாவில் பங்கேற்ற சர்வதேச சினிமா துறையை சேர்ந்த பலர் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர்.
இதயம் வேகமாக துடித்தது
மேடையில் நடந்த சம்பவத்துக்காக என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. மீண்டும் மேடைக்கு சென்று பேச வேண்டும் என்று உணர்ந்தேன். ஆனால் மேடைக்கு பின்னால் தான் என்னால் பேச முடிந்தது. இது நன்றாக இல்லை.
எங்களது படத்துக்காக உழைத்த படக்குழுவினர் மற்றும் எனது கணவர் சன்னி கபூர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.






