தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்- உத்தவ் தாக்கரே பேட்டி

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை போல தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை,
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை போல தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
ஷிண்டேக்கு சின்னம், பெயர்
சிவசேனா கட்சி 1966-ம் ஆண்டு பால் தாக்கரேயால் தொடங்கப்பட்டது. அந்த கட்சியின் தலைவராக பால்தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே இருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா கட்சி 2 ஆக உடைந்தது. உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 அணிகளாக செயல்பட்டு வந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த முடிவு உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்து உள்ளது. மராட்டிய அரசியலில் புயலை ஏற்படுத்தி உள்ளது.
அவசர ஆலோசனை
இந்தநிலையில் உத்தவ் தாக்கரே தாதரில் உள்ள சேனா பவனில் நெருக்கமான மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். தேர்தல் ஆணையம் கட்சியின் பெயர், சின்னத்தை பறித்து உள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களுடம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான சஞ்சய் ராவத், அனில் தேசாய், சுபாஷ் தேசாய், அனில் பரப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். உத்தவ் தாக்கரே அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்த தனது ஆதரவு மாவட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்.
பின்னர் சேனா பவனில் உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-
கலைக்க வேண்டும்
அவசர கதியில் தேர்தல் ஆணையம் சிவசேனா விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டிய தேவை என்ன? தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது. தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும். தேர்தல் ஆணையர் நியமிக்கப்படாமல் தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய முறையான வழிகள் இருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை தேர்வு செய்வது போல தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும்.
சிவசேனாவின் பெயர், சின்னத்தை ஷிண்டேவிடம் ஒப்படைத்த தேர்தல் ஆணையத்தின் முடிவு முற்றிலும் தவறானது. நேரத்துக்கு தகுந்தாற்போல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
தேர்தல் ஆணையம் கட்சி தொண்டர்கள் பட்டியல், பிரமாணங்களை தாக்கல் செய்யுமாறு எங்களிடம் கூறியது. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தோம். ஆனால் கட்சி சின்னம், பெயர் ஒதுக்கியதில் தேர்தல் ஆணையம் முற்றிலுமாக அதை புறக்கணித்துவிட்டது.
தேர்தல் ஆணையம் கட்சியின் பெயர், சின்னத்தை அவர்களுக்கு வழங்கியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து உள்ளோம். மனு மீதான விசாரணை நாளை (அதாவது இன்று) நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






