நாட்டில் முதல்முறையாகஎ லெக்ட்ரிக் ஏ.சி. மாடி பஸ் அறிமுகம்- அடுத்த மாதம் சேவை தொடக்கம்

நாட்டில் முதல் முறையாக எலெக்ட்ரிக் ஏ.சி. மாடி பஸ் மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஏ.சி. மாடி பஸ் சேவை அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.
மும்பை,
நாட்டில் முதல் முறையாக எலெக்ட்ரிக் ஏ.சி. மாடி பஸ் மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஏ.சி. மாடி பஸ் சேவை அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.
எலெக்ட்ரிக் மாடி பஸ்
மும்பையில் பெஸ்ட் சார்பில் மாடி பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் மிகவும் பழமையானது என்பதால், தற்போது வெகுசில மாடி பஸ்கள் மட்டுமே நகரில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் மும்பையில் இன்று எலெக்ட்ரிக் மாடி பஸ் அறிமுக விழா நடந்தது. நாட்டிலேயே முதல் முறையாக எலெக்ட்ரிக் மாடி பஸ் சேவை மும்பையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுதொடா்பாக தென்மும்பை ஒய்.பி. மையத்தில் நடந்த விழாவில் மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி மாடி ஏ.சி. பஸ்சை அறிமுகம் செய்து வைத்தார். நகரில் அடுத்த மாதம் எலெக்ட்ரிக் ஏ.சி. பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.
நவீன வசதிகள்
மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நவீன வடிவ ஏ.சி. மாடி பஸ்சில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. 65 பேர் உட்கார்ந்து செல்ல முடியும். மேலும் பயணிகள் வெளி அழகை பார்த்து ரசிக்கும் வகையில் பஸ் ஜன்னல் கண்ணாடிகள் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் வசதிக்காக பஸ்சில் முன், பின் பகுதிகளில் மாடிப்பகுதிக்கு செல்ல படிகள் வைக்கப்பட்டுள்ளன. பழைய பஸ்சில் ஒரு இடத்தில் மட்டும் படிகள் இருக்கும். இதேபோல 2 அகல கதவுகள், சீட் பெல்ட் மற்றும் லேப்டாப், செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளும் இடம்பெற்று உள்ளன.
அதே நேரத்தில் பழமையான மாடி பஸ்கள் மேற்கூரை இன்றி திறந்தநிலையில் இருக்கும். எனவே அந்த பஸ்சில் பயணம் செய்த உணர்வு மேற்கூரையுடன் கூடிய எலெக்ட்ரிக் மாடி பஸ்சில் செல்லும் போது கிடைக்காது என பயணிகள் கூறியுள்ளனர். இதேபோல பஸ்சின் நிறம் முழுமையாக சிவப்பாக இருந்து இருக்கலாம் எனவும் பயணிகள் கருத்து கூறியுள்ளனர்.






